ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியின் முக்கிய ஆட்டக்காரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளியன்று தொடங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளரான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரீஸ் டாப்ளேவுக்கு காயம் ஏற்பட்டது. டி20 போட்டிகளில் டாப்ளே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் அணிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- ரீஸ் டாப்ளேவின் முழங்கால் நேரடியாக தலையில் ஊன்றியதுடன், தோளிலும் உள் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. முதற்கட்டமாக வரும் தகவல்கள் நம்பிக்கை அளிக்கின்றன. அவர் விரைவில் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் தற்போதைய நிலையில் அவர் உடனடியாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இந்த சீசனை மிகச்சிறப்பான வெற்றியுடன் பெங்களூரு அணி தொடங்கியுள்ளது. ஆனால் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதுதான் எங்களுக்கு கவலை அளிக்கிறது. தொடர்ச்சியாக 4 ஆவது முறையாக மும்பை அணியை நாங்கள் வென்றுள்ளோம். இது எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.