ஐபிஎல் தொடரின் இறுதி யுத்தத்தில் சென்னையுடன் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்க, இன்றைய இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் - முன்னாள் சாம்பியன் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் மற்றொரு அணி யார் என்பதை தீர்மானிக்க இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் கலைகட்டவுள்ளது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணி - ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.
லீக் போட்டிகளில் 14ல் 10 வெற்றிகளை பதிவு செய்து பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் அணி - 14 போட்டிகளில் 8-ல் வெற்றியை வசப்படுத்தி நான்காவது இடம் பிடித்த மும்பை அணியை எதிர்கொள்கிறது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கம் பேக் கொடுத்த மும்பை அசுர பலத்தில் ஆறாவது கோப்பைக்கு மல்லுகட்டுகிறது.ஆர்ச்சர், பும்ரா போன்ற நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லாமல் மெத்வே போன்ற இளம் வீரர்களை வைத்து அசத்தி வருகிறது.
பேட்டிங்கில் திலக் வர்மா, க்ரீன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதே வேளையில் ஓபனர்களான ஹிட் மேன் ரோஹித், இஷாந்த் கிஷன் ஆகியோர் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகிறது. சொந்த மைதானத்தில் களமிறங்குவது குஜராத் அணிக்கு கூடுதல் பலத்தை அளித்தாலும் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை தக்கவைக்க குஜராத் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: 5 ரன்கள் 5 விக்கெட்.. இன்ஜினியர் டூ கிரிக்கெட்டர்..! -ஆகாஷ் மத்வாலின் மேஜிக் கதை
ஹர்த்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பில் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தாலும் இறுதி கட்ட ப்ரஸரை எதிர்கொள்ள இன்னமும் வீரர்கள் சிரமப்படுகின்றனர். நட்சத்திர வீரர் சமி பவர்பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கில்லாடியாக செயல்படுகிறார். நூருல் மற்றும் மொஹித் ஷர்மா ஆகியோர் கைகொடுத்தால் ரன் வேட்டையை கட்டுப்படுத்தலாம்.
சுழல் ஜாம்பவான் ரஷித் கான் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். சமி 26 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பர்ப்பிள் கேப்பிற்காக சண்டை போடுகின்றனர். இருவரும் ஒரே அணியில் விளையாடுவது எதிரணி பேட்ஸ்மேன்களுகு சற்று திண்டாட்டம் தான்.
ஓபனர் கில் இரண்டு சதங்களை விளாசி 722 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பிற்கு மிக அருகில் உள்ளார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தும் குஜராத்தை சமாளிக்குமா மும்பை என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். லீக் போட்டிகளில் இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் குஜராத் ஒரு வெற்றியும், மும்பை ஒரு வெற்றியும் பதிவு செய்து சமபலத்துடன் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat Titans, IPL 2023, Mumbai Indians