16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 2010, 2011, 2018, 2021 என 4 முறை கோப்பையை வென்று, மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது. அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை அச்சரியமடைய செய்தது.
கடந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவ்வளவு சாதகமாக அமையவில்லை. தோனி கேப்டன்சியில் இருந்து விலகியது, ஜடேஜா தலைமையில் சி.எஸ்.கே தொடர்ந்து சறுக்கியது, முக்கிய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போனது, அணி வீரர்களின் காயம் உள்ளிட்டவை கடந்த முறை சென்னை அணிக்கு பலவீனமாக அமைந்தது. ஆனால் இம்முறை ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அசத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா உள்ளிட்ட ஆல் ரவுண்டர்கள் அணிக்கு தூணாக இருப்பார்கள். மேலும் கடந்த ஆண்டு காயம் காரணமாக விளையாடாத தீபக் சாஹரின் வருகை பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : முதல் போட்டியிலே தோனி இல்லையா..? ரசிகர்களுக்கு ஷாக்
கூடுதலாக அம்பத்தி ராயடு, ஷிவம் தூபே ஆகியோரும் அவர்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னை அணிக்கு நிச்சயம் வெற்றி காத்திருக்கிறது. இதுதவிர கைல் ஜேமிசனுக்கு மாற்றாக வந்த தன் ஆப்பிரிக்கா வீரர் சிசண்டா மகலா டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர் என பெயர் பெற்றவர். இவரின் பங்களிப்பும் இருந்தால் சென்னை அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கும்.
மறுபக்கம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் முறையே கோப்பையை வென்றுள்ளதால் உற்சாகத்துடன் களமிறங்கும். சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட், சாய் சுதர்சன், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், விருத்திமான் சஹா என்று குஜராத் அணியில் மேட்ச் வின்னர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். டேவிட் மில்லர் மட்டும் வேறொரு டி20 லீக்கில் பங்கேற்பதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியை வீழ்த்திய குஜராத் அணி, இம்முறை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற வேண்டும் என களமிறங்கும். ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரையில், தான் கேப்டன்ஸியில் மிகவும் பொறுப்பாக, அணியில் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு விளையாடுவதாக தெரிவித்தார், மேலும் கடந்த ஆண்டு இவர் மீண்டு வரும்போது இருந்த ஃபார்மிலேயே தொடருவதால், இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Gujarat Titans, Hardik Pandya, IPL 2023, MS Dhoni, Tamil News