மும்பை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடியான வெற்றியை பதிவு செய்து பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.
மும்பையின் பேட்டிங்கில் அனல் பறக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. தொடக்க வீராங்கனைகள் யஸ்திகா பட் 1 ரன்னிலும், ஹேலி மேத்யுஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நேட் சீவர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். வழக்கம்போல இந்த ஆட்டத்திலும் மும்பை அணியை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தாங்கிப் பிடித்தார். ஹர்மன்ப்ரீத் 23 ரன்கள், பூஜா வஸ்த்ராகரின் 26 ரன்கள் மற்றும் இஸி வாங்கின் 23 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்டர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீராங்கனைகள் மெக் லேனிங் – ஷபாலி வர்மா இணை வழக்கம்போல அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. 15 பந்தில் ஒரு சிக்சர் 6 பவுண்டரியுடன் ஷபாலி வர்மா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலிஸ் கேப்ஸி 17 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் மெக் லேனிங் தன் பங்கிற்கு 32 ரன்கள் சேர்த்தார். 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த டெல்லி அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் மும்பையை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு டெல்லி முன்னேறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WIPL