காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆஷஸ் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அவருக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து அவரை தேர்வுக்குழுவினர் நீக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேனின் முடிவில் அவருக்கு வலது முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் அதிகமாக உள்ளது. இதிலிருந்து குணம் அடைவதற்கு ஆர்ச்சருக்கு நீண்ட நாட்கள் தேவைப்படும். அவருக்கு இங்கிலாந்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.’ என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு எதிரான 4 நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த மாத இறுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகவள்ளது. இந்நிலையில் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் செயல்படுவார். அவருடன் அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹேரி ப்ரூக், ஸாக் கிராவ்லே, பென் டக்கெட், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், ஒலியே போப், மேத்யூ போட்ஸ், ஒலியே ராபின்சன், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.