முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘உம்ரான் மாலிக்கிற்கு ஓய்வே கொடுக்க கூடாது’ – பிரெட் லீ வலியுறுத்தல்

‘உம்ரான் மாலிக்கிற்கு ஓய்வே கொடுக்க கூடாது’ – பிரெட் லீ வலியுறுத்தல்

ப்ரெட் லீ - உம்ரான் மாலிக்

ப்ரெட் லீ - உம்ரான் மாலிக்

இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு ஓய்வே கொடுக்கக் கூடாது என்றும் அவரை அனைத்து போட்டிகளிலும் பயன்படுத்த வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பது வீச்சாளர் பிரெட் லீ வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் அதிவேகப் பந்து வீச்சாளராக உம்ரான் மாலிக் வளர்ந்து வருகிறார். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை வீசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் உம்ரான் மாலிக். இருப்பினும் அவர் அதிகப்படியான ரன்களை எதிரணிக்கு கொடுப்பதால், அவருக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார். இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான ஃபார்மேட் போட்டிகளிலும் உம்ரான் மாலிக்கால் சிறப்பாக விளையாட முடியும் என்று கருதுகிறேன். அவருக்கு அணி நிர்வாகம் அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும். உம்ரானுக்கு ஓய்வே கொடுக்க கூடாது.

உடற்பயிற்சியை பொருத்தளவில் உம்ரான் மாலிக் அதிகப்படியான எடையை தூக்கி பயிற்சி செய்யாமல் குறைந்த எடையை வைத்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஸ்பிரின்ட் எனப்படும் வேகமாக ஓடுதல் மற்றும் அனைத்து தசைகளுக்குமான பயிற்சியை எடுக்க வேண்டும். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்போதுதான் உம்ரான் மாலிக்கால் ஆட்டத்தில் மேம்பட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தற்போது வரை இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். இருப்பினும் அவரது ஒருநாள் போட்டிகளுக்கான சராசரி, ஓவருக்கு 6.45 ரன்னாகவும், டி20 போட்டிகளில் 10.48 ரன்னாகவும் இருப்பதுதான் பிரச்னையாக உள்ளது.

First published:

Tags: Cricket