தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களாக அழைக்கப்படுவது க்ருத்திகை - பூசம் - விசாகம். இந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி வரும் நாள் முருகனுக்கு உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது. அதாவது திருக்கார்த்திகை - கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி, அதே போல் தை மாதம் பௌர்ணமி வரும் நாள் தைப்பூசம், இதே போல் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது. இந்த வைகாசி விசாகம் முருகன் பிறந்த நாளாக கருதப்படுகிறது.
விசாகம் நட்சத்திரத்திற்கு என்று பல சிறப்புகள் உள்ளது. அதில் முக்கியமானது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் துவங்குவது இந்த விசாக நட்சத்திரங்கள்தான். இந்த விசாக நட்சத்திரத்திற்கு ஜோதிட ரீதியாக குரு அதிபதி ஆவார்.
இந்த வருடம் வைகாசி விசாகம் எப்போது?
வைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் வைகாசி விகாசம் ஆனது, வரும் ஜூன் 2 ஆம் நாள் காலை 05.55 மணிக்குத் தொடங்கி, ஜூன் 3 ஆம் நாள் காலை 05.54 வரை இந்த விசாகம் நட்சத்திரம் உள்ளது.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஞானம், செல்வ வளம், நீண்ட ஆயுளை பெற, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை பெற விரும்புபவர்கள் வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானுக்கு விரதம் இருக்கலாம்.
வைகாசி விசாகம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:
முருகன் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி. தைரியம் - வீரம் - வீடு மனை - வாகனப் ப்ராப்தம் - ரத்தம் சம்பந்தமான உறவுகள் - செல்வம் போன்ற பல விஷயங்களுக்கு அதிபதி முருகன். முருக பெருமானின் பிறந்த நாளை வைகாசி விசாகம் என்ற பெயரில் விழாவாக கொண்டாடுகிறோம். இந்த திருவிழா முக்கியமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் நாளின் சிறப்புகள்
1. வைகாசி விசாகம் வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் வருவதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் உற்சவம் நடைபெறும். இது வெப்பம் தணிக்கும் விழா என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க... கந்தசஷ்டி விரதம் இருப்பதினால் கிடைக்கும் பலன்கள்
2.இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. அதே போல் திருச்செந்தூர் வசந்த மண்டபத்தில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை விடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்று பராச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
3. அம்மனிடமிருந்து முருகன் சக்தியைப் பெற்ற நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது.
4.மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள்.
5. பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
6. வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.
7. தஞ்சை பெரிய கோயிலில் பல கல்வெட்டுகள் இருக்கிறது. அதில் பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றுபவர்களுக்கு, ஆண்டுதோறும், வைகாசி விசாக தினத்தில் நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
8. ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம்.
9. இந்த சிறப்பான நாளில் தான் பெரும்பாலான முருகன் கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது.
10. முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.
இப்படி பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.
விரத பலன்கள்
வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபடலாம். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். எதுவும் தெரியாதவர்கள் சரவண பவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை மனதார உச்சரித்தாலே முருகனின் கருணை நமக்கு கிடைத்து விடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murugan