திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் பக்தர் ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்த விவகாரம் காரணமாக உயர் மட்ட பாதுகாப்பு குழு திருப்பதி மலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் ரெட்டி என்ற வாலிபர் சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்த நிலையில் செல்போனை கோயிலுக்குள் எடுத்து சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஐ.எஸ். ஐ. எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக மத்திய, மாநில உளவுத்துறைகள் தேவஸ்தானத்திற்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. எனவே திருப்பதி மலையில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆனால் கடும் பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறி ஒருவர் செல்போனை கோவிலுக்குள் எடுத்து சென்றது எப்படி என்ற கேள்வி பல்வேறு தரப்புகளில் இருந்தும் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் அந்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி மலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்மையிலேயே சிறப்பான முறையில் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
எனவே இது பற்றி ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா, தேவஸ்தான விஜிலன்ஸ் துறை தலைமை அதிகாரி நரசிம்ம கிஷோர், அனந்தபுரம் டிஐஜி அம்மி ரெட்டி மற்றும் போலீஸ் உயரதிகாரிகள், புலனாய்வு துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு உயர் மட்ட ஆய்வு கூட்டம் திருப்பதி மலையில் நடைபெற்றது.
அப்போது பேசிய ஆந்திர மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா, ”திருப்பதி மலைக்கு தினமும் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் வருகின்றன. திருப்பதி மலைக்கு வரும் வாகனங்களையும் பக்தர்களையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் இந்த பணிக்கு ஏராளமான அளவில் பாதுகாப்பு ஊழியர்கள் தேவை உள்ளது.
சோதனை, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது மிகவும் அவசிய தேவையாகும். திருப்பதி மலையில் உள்ள நான்கு மாட வீதிகளில் குயிக் ரியாக்சன் டீம் எனப்படும் விரைந்து செயல்படும் அதிரடி படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
பெண் பக்தர்களை சோதனை செய்ய பெண் ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். சைபர் செக்யூரிட்டியை மேற்கொள்ள எஸ்பி அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை பணியமர்த்த வேண்டும். திருப்பதி மலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து பத்து நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க எஸ்பி அந்தஸ்து அதிகாரி தலைமையான குழு ஒன்றை உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
மாநில அரசின் ஒப்புதலை பெற்று அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை திருப்பதி மலைக்கு கொண்டு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்” என்று அப்போது கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Security guards, Security tightened, Tirumala Tirupati, Tirupati, Tirupati temple