திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ‘தூய்மையான திருமலை - சுந்தர திருமலை’ எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருப்பதி மலையடிவாரத்தில் இருந்து திருமலை முழுவதும் மாதத்தில் ஒருநாள் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் அகற்றப்படுகின்றன.இந்த ‘மாஸ் க்ளீனிங்’ திட்டத்தில் பங்கேற்க தேவஸ்தான ஊழியர்கள் 700 பேருடன் அலிபிரியிலிருந்து புறப்பட்ட பஸ்களை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றுமுன்தினம் காலை 6 மணியளவில் தொடங்கி வைத்தார்.
திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் மாபெரும் தூய்மை பணியை மேற்கொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருப்பதி மலையில் உள்ள இரண்டு மலைப்பாதைகள், பக்தர்கள் நடந்து செல்லும் இரண்டு வழித்தடங்கள் ஆகியவற்றில் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராம ரெட்டி, போலீஸ் அதிகாரிகள், தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் உட்பட 2000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து தேவஸ்தான ஊழியர்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பேருந்துகளில் புறப்பட்டு சென்ற நிலையில் அந்த பேருந்துகளை முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து என்.வி.ரமணா தேவஸ்தான நிர்வாக
அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் உட்பட அனைவரும் திருப்பதி மலையில் உள்ள இரண்டு மலைப் பாதைகள், பக்தர்கள் நடந்து செல்ல பயன்படுத்தும் இரண்டு வழித்தடங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மற்றும் நடைபாதை ஆகியவற்றின் ஓரங்களில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், "ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருப்பதி மலை மிகவும் புனிதமானது. இதனை நம் வீட்டு பூஜை அறை போல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அது நமது அனைவரின் கடமையாகும்” என்றார்.
தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில், , “இனி ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை இதேபோன்று ‘மாஸ் கிளீனிங்’ திட்டம் அமல்படுத்தப்படும். தயவுசெய்து பக்தர்கள் யாரும் திருமலைக்கு தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம்” என்றார்.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati