முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருமணஞ்சேரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!

திருமணஞ்சேரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!

திருமணஞ்சேரி

திருமணஞ்சேரி

Mayiladuthurai | திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழா திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் திருமணம் கைகூட வேண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வதும், திருமணம் கைகூடியதும் தம்பதி சமேதராய் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து செல்வதும் வழக்கம்.

சிறப்புமிக்க இக்கோவிலின் சித்திரை மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 25-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு  அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் சுவாமி திருஆபரணங்கள் அணிந்து தங்க கவச அலங்காரத்தில் காசி யாத்திரைக்கு திரு எதிர்கொள்பாடி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கோகிலாம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. பெண்கள்  சீர்வரிசை எடுத்து வந்து நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அம்பாளுக்கு பாலால் கால் அலம்பி, பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்கள் நலுங்கிட்டனர்.  தொடர்ந்து  ஹோமம் வளர்க்கப்பட்டு  கன்னிகாதானம் செய்யப்பட்டது.

Also see... திருச்சிக்கு அருகில் அருவி, ஏரி, ட்ரெக்கிங் எல்லாம் சேர்ந்த அட்டகாசமான வெக்கேஷன் ஸ்பாட் இதோ!

பின்னர் பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது. பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு அலங்கார தீபம் மகாதீபாரதனை  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

top videos
    First published:

    Tags: Marriage, Mayiladuthurai