முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி ஏழுமலையானுக்கு ஜம்முவில் கோவில்... ஜூன் 8ல் கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஜம்முவில் கோவில்... ஜூன் 8ல் கும்பாபிஷேகம்

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜம்முவில் கட்டி இருக்கும் ஏழுமலையான் கோவிலுக்கு அடுத்த மாதம் 8ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தவிர சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஏழுமலையான் கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டி வருகிறது.

கோவில்களைக் கட்டும் பணிக்கு தேவையான பணத்தை திரட்டுவதற்காக தேவஸ்தான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறது.

அந்த அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏழுமலையானை வி வி ஐ பி தரிசனத்தில் தரிசிக்கும் வாய்ப்பை 500 ரூபாய் கட்டணத்தில் தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இதற்கான டிக்கெட்டுகளை ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக தலா பத்தாயிரம் ரூபாய் செலுத்தி பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் 2,000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து வந்த நிலையில் தற்போது கோடைகாலம் ஆகையால் சாதாரண பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு தேவஸ்தான நிர்வாகம் 500 டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு அரசாங்கம் அங்கு ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 62 ஏக்கர் நிலத்தை ஓராண்டுக்கு முன் வழங்கியது. அந்த இடத்தில் பிரமாண்டமான அளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இது தவிர பிரசாத தயாரிப்பு கூடம், அன்னதான கூடம், பக்தர்கள் வாகனங்களை நிறுத்தும் இடம் ஆகியவற்றையும் தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோவிலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர் அடுத்த மாதம் எட்டாம் தேதி ஜம்முவில் கட்டப்பட்டு இருக்கும் ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்.

அன்றைய தினம் யாகசாலை பூஜைகள், விக்கிரக பிரதிஷ்டை, பிராண பிரதிஷ்டை ஆகியவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி.

First published:

Tags: Jammu, Tirumala Tirupati, Tirupati