அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு சுமார் 11 டன் எடையுள்ள திருவாபரணங்கள் உள்ளான. அவை, வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம் ஆகியவை உள்ளிட்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட டன் கணக்கிலான எடையுள்ள திருவாபரணங்கள் ஏழுமலையானுக்கு தினமும் அணிவிக்கப்படுகிறது. ஏழுமலையானின் திருவாபரணங்களில் சந்தை மதிப்பு சுமார் 50,000 கோடி ரூபாய். விலை மதிக்க இயலாத மிகப் பழமையான திருவாபரணங்களும் ஏழுமலையானிடம் உள்ளன.
ரகசியமாக காக்கப்படும் நகைகள்
அலங்காரப்பிரியர் என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு சுமார் 11 டன் எடையும், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பும் கொண்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட திருவாபரணங்கள் சொந்தமாக உள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏழுமலையானின் திருவாபரணங்களின் மதிப்பு, அவற்றின் விபரம் ஆகியவற்றை பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது.
11 டன் திருவாபரணங்கள்
நகைகளை ரகசியமாக வைக்க காரணம் ஏழுமலையானுக்கு அலங்கரிப்பதற்காக கோவிலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 11 டன் திருவாபரணங்களில் ஏராளமான திருவாபரணங்கள் மிகவும் பழமையானவை ஆகும். அவற்றை மாமன்னர்கள், மன்னர்கள், ஜமீன்தார்கள் உள்ளிட்ட பக்தர்கள் வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், கோமேதகம் புஷ்பராகம் ஆகிய உள்ளிட்ட ஏராளமான அளவிலான நவரத்தினங்களை பதித்து திருவாபரணங்களை தயார் செய்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.
Also see... திருப்பதி காளஹஸ்தி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...
அவற்றின் தற்போதைய மதிப்பு மார்க்கெட் மதிப்பை விட பல நூறு மடங்கு அதிகமாகும். எனவே அவற்றை ஏழுமலையான் கோவிலில் கருவறையை ஒட்டி இருக்கும் பகுதியில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கூடிய லாக்கர்களில் தேவஸ்தானம் பத்திரப்படுத்தி வைத்துள்ளது. அந்த லாக்கர்களில் சிறிய அசைவு ஏற்பட்டால் கூட உடனே தானியங்கி முறையில் தேவஸ்தான நிர்வாக
அதிகாரி, விஜிலன்ஸ் துறை உயர் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளுக்கு தகவல் சென்றுவிடும். எனவே அந்த லாக்கர்களை உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் யாரும் நெருங்கவே முடியாது.
நகைகள் குறித்த முழு விவரம்
மூலவர் ஏழுமலையானுக்கு அலங்கரிப்பதற்காக, சொர்ண பத்ம பீடம், ஸ்வர்ண பீடம், நூப்புராலு, பவளம், கஞ்சி குன்னம், அன்கெலு, ஒட்டியானம், உத்தர பந்தம், சிறிய மணிகளுடன் கூடிய தசாவதார ஹாரம், தங்கத்தால் செய்யப்பட்ட புஜங்களுடன் கூடிய ஹாரம்,
கொப்பு ஹாரம், தங்க பூணூல், தங்க துளசி இலைகள், நாலு கிலோ எடை உள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சதுர்ப்புஜ லட்சுமி ஹாரம், அஷ்டோத்திர சத நாம ஹாரம், 32 கிலோ எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சகஸ்ர நாமாவளிஹாரம்,
நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சூரிய கடாரி, வைகுண்ட ஹஸ்தம், கடிக ஹஸ்தம், கடியம், கர பூசனாலு, புஜதண்ட பூசனாலு, புஜகீர்த்திகள், கர்ண பத்திரங்கள், சங்கு சக்கரங்கள், ஆகாச ராஜன் காணிக்கையாக சமர்ப்பித்த கிரீடம்,சாலிகிராமஹாரம், திருக்களம், வைரத்தால் செய்யப்பட்ட அஷ்வர்த்தபத்தர ஹாரம், ஐந்து சர கந்தி, சந்திர வணக்க கந்தி, முகப்பட்டி, ஸ்ரீ வஷ்சம், கவுஸ்துபம், தங்க பீதாம்பரம், பத்துக்கு மேற்பட்ட கிரீடங்கள், வைரஹாரம், வைர சங்கு சக்கரம், கர்ண பத்திரங்கள், வைர கடிகாரம், 13 கிலோ 360 கிராம் இடையுள்ள வைர கிரீடம் ( இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 5 கோடிக்கும் மேல்).
Also see... திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையின் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!
பல கோடி மதிப்புடைய பச்சைக் கல்
ஏழுமலையானின் மிக பழமையான திருவாபரணங்களில் மிகவும் அரிதிலும் அரிதான கருட மேறு என்று கூறப்படும் பச்சைக் கல் ஒன்று உள்ளது. இதன் எடை அரை கிலோ ஆகும். மிகவும் பழமையான இந்த பச்சைக் கல்லின் மார்க்கெட் மதிப்பு பல கோடி ரூபாய்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆகாச ராஜன் கொடுத்த பழமையான கிரீடம்
ஏழுமலையானுக்கு அலங்கரிப்பதற்காக மிக முக்கியமான ஏழு கிரீடங்கள் உட்பட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட கிரீடங்கள் கோவிலில் உள்ளன. அவற்றில் ஆகாச ராஜன் கொடுத்த மிகப் பழமையான கிரீடமும் ஒன்று. அந்த கிரீடத்தின் மதிப்பு தற்போதைய சந்தை மதிப்பை விட பல்லாயிரம் மடங்கு அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது. காரணம் அது அவ்வளவு பழமையானது.
மேலும் முத்துமாலைகள் 20, காசு மாலைகள் 50, உற்சவமூர்த்திகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட தங்க கிரீடங்கள், வைர கிரீடங்கள், கத்துவால் மகாராஜா சமர்ப்பித்த கிரீடங்கள் ஆகியவை உற்சவர்களுக்கு அலங்கரிப்பதற்காக கோவிலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
ஏழுமலையான் திருவடி திருவாபரணங்கள்
இவை தவிர ஏழுமலையான் திருவடிகளில் கீழ் இருக்கும் பத்மபீட்டம், தங்க தகடுகள், தங்கத்தால் செய்யப்பட்ட பாத கவசங்கள், சொர்ண பீத்தாம்பரம், பங்காரு கட்ஹம் என்று கூறப்படும் சூரியக்கட்டரி, வைகுண்ட கட்ஹத்தின் மீது அலங்கரிக்கப்படும் தங்க கவசங்கள், நாகாபரணம், தங்க துளசிஹாரம், தங்க காசு மாலை, தங்க கொலுசு, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சங்கு, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சக்கரம் ஆகிவை உள்ளிட்ட மேலும் 50க்கும் மேற்பட்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் ஏழுமலையானுக்கு சொந்தமாக உள்ளன.
ஏழுமலையானுக்கு அலங்கரிப்பதற்காக கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணங்கள் பற்றிய விவரம் கோவிலில் உள்ள திருவாபரண பதிவேட்டில் உள்ளது.
திருவாபரணங்களை சரிபார்க்கும் நிகழ்வு
குறிப்பிட்ட இடைவெளியில் தேவஸ்தான உயர் அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் ஆகியோர் திருவாபரண பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள ஆபரணங்கள் பத்திரமாக உள்ளதா என்று சரிபார்க்கும் செயல் நாள் கணக்கில் நடைபெறும்.
ஏழுமலையான் திருவாபரணங்களை சரிபார்க்கும் செயலில் தேவஸ்தான உயரதிகாரிகள், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் ஆகியோர் ஒரு வாரத்திற்கு மேல் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போது அவற்றின் எடை, திருவாபரணங்களில் பதிக்கப்பட்டுள்ள நவரத்தின கற்கள் உண்மையானவயா அல்லது போலியா, நவரத்தின கற்களின் எடைகள் சரியாக உள்ளனவா என்பது போன்ற அனைத்து அம்சங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati