திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல அடுக்கு பாதுகாப்பை மீறி கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்று வீடியோ பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் இடம்பெற்றுள்ளது. எனவே, திருப்பதி மலையின் பாதுகாப்பு விஷயத்தில் தேவஸ்தான நிர்வாகத்துடன் சேர்ந்து மத்திய, மாநில அரசுகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட திருப்பதி மலையில் ஒட்டுமொத்த பாதுகாப்பை மாநில போலீசாரும், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரும் மேற்கொண்டுள்ளனர்.
இது தவிர தீவிரவாத தாக்குதல் போன்ற அவசர கால நேரத்தில் விரைந்து செயல்படுவதற்காக அதிரடி படை பயிற்சி பெற்ற ஆக்டோபஸ் படையினர் தொடர்ந்து திருப்பதி மலையில் முகாமிட்டுள்ளனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பு படையினர் தொடர்ந்து திருப்பதி மலையை கண்காணித்து வருகின்றனர். இது தவிர ஏழுமலையான் கோவில் உட்பட திருப்பதி மலை முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருக்கும் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் திருப்பதி மலையில் ஒவ்வொருவரின் அசைவையும் மிக நுணுக்கமாக 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட அனைவரின் உடைமைகளும் மலையடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது செல்போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்கிறார்களா என்று இரண்டு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
செல்போன்களை ரிமோட் போன்று பயன்படுத்தி நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ள காரணத்தால் அவற்றுக்கு கோயிலுக்குள் அனுமதி கிடையாது. மேலும் சாஸ்திர,சம்பிரதாய ரீதியாக மூலவர் ஏழுமலையானை வீடியோ எடுக்கவோ, படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு காரணங்களுக்காக ஏழுமலையான் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்து செல்ல பக்தர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.
இது தவிர திரவ ரூபத்தில் இருக்கும் வெடி பொருட்களை கோவிலுக்குள் எடுத்து சென்று சமூகவிரோதிகள் நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதால் தண்ணீர் பாட்டில்களை ஏழுமலையான் கோவில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு கடுமையான கட்டு காவல்களையும் மீறி நேற்று இரவு கோவிலுக்குள் செல்போனை எடுத்து சென்ற பக்தர் ஒருவர் அங்கு தனது இஷ்டத்திற்கு வீடியோ பதிவு செய்துள்ளார். ஏழுமலையான் கோவிலை பொறுத்தவரை வெள்ளி வாசலை தாண்டி கேமராக்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்தர் வெள்ளிவாசலை தாண்டி உள்ளே சென்று வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பக்தர் செய்த இந்த செயலால் ஏழுமலையான் கோவில் பாதுகாப்பில் பெரிய பின்னடைவு இருப்பது தெரியவந்துள்ளது.கோவிலுக்குள் பக்தர் வீடியோ எடுப்பது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் போனது எப்படி என்ற சந்தேகமும் இதனால் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது பற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின் பேரில் அந்த பக்தர் மீது வழக்கு பதிவு செய்துள்ள திருமலை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.