பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக போற்றப்படுவது, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த, 1ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கும் கொடியேற்றம் கடந்த, 18ம் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் ஸ்வாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளினர். மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக ஸ்வாமி, அம்மன் தெருவடச்சான் எனப்படும் சப்பரத்தில் நேற்றிரவு எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. "ஆனைக்கா அண்ணலே போற்றி" என்ற கோஷங்கள் முழங்க, கைலாய வாத்தியங்கள் விண் அதிர, திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக, இன்று அதிகாலை ஸ்வாமி, அம்மனுக்கு உற்சவ மண்டபத்தில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மகர லக்னத்தில் அதிகாலை, 3.45 மணிக்குள் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.
Also see... ஊட்டி மாரியம்மன் கோவில் 3ம் நாள் திருவிழா.. ஸ்ரீபராசக்தி ரூபத்தில் அருள்புரிந்த அன்னை..
அதையடுத்து, விநாயகர், சுப்ரமணியர் எழுந்தருளிய சிறிய தேர்கள் காலை, 5.30 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டன. ஸ்வாமி தேர், மேல உள்வீதி- தெற்கு உள்வீதி சந்திப்பு வந்தவுடன், அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
தேர் திருவிழாவையொட்டி, தேரோடும் வீதிகள் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. திரும்பும் திசையெல்லாம் பக்தர்கள் தாகம் தணிக்க நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trichy