மதுரை சித்திரைப் பெருவிழாவில் அழகரை மகிழ்விக்கும் பக்தர்களுக்காக ஆட்டுத்தோலில் தயாரிக்கப்பட்ட தண்ணீர் பையும், மூங்கில் கூடையில் உருவாக்கப்பட்ட தலைப்பாகை விற்பனையும் தேரடி வீதியில் துவங்கியுள்ளன.
மதுரை சித்திரைப் பெருவிழாவில் மீனாட்சி அம்மன் கோவில் விழாவும், அழகர்கோவில் விழாவும் மொத்தம் 22 நாட்கள் கோலாகலமாக பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த இந்த இரண்டு கோவில் விழாக்களையும் மதுரை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் இணைத்துள்ளார்.
பாண்டிய நாட்டில் அப்போது நிலவிய சைவ - வைணவ மோதலை தீர்க்கவும், மீனாட்சி கோயிலுக்கு அவர் செய்து கொடுத்த பெரிய தேர்களை இழுக்க ஆட்களை வரவழைக்கவும் இரு கோவில் விழாக்களையும் இணைத்துள்ளார். இந்த இணைப்பின் பின்னால் உள்ள மற்றுமொரு முக்கிய அம்சம், பெரிய சந்தைகளை நடத்தி அதன் மூலம் மக்களிடம் பொருளாதார சுழற்சியை ஊக்குவிப்பதே.
இந்த சுழற்சியில் பெரும்பாலும் தெருவோர சிறு குறு கடைகள் தான் பெரும்பங்கு வகித்து வந்தாலும், தண்ணீர் பீய்ச்ச பயன்படுத்தப்படும் தோல் பையும், மூங்கிலில் செய்யப்பட்ட தலைப்பாகையும் தனித்துவமானவை.
சித்திரை மாதம் விழா நடைபெறுவதால் வெயில் தாக்கத்தை தணிக்க அழகர் மீதும், அவரை சந்திக்க வரும் மக்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விப்பதற்காக ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட பிரத்யேக பை ஒன்றை மக்கள் பயன்படுத்துகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பாரம்பரிய தோல் பை தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சித்திரை திருவிழா துவங்கும் 4 மாதங்களுக்கு முன்னரே ஆட்டு தோல்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதை பதப்படுத்தி கொண்டு வந்து, திருவிழா நேரத்தில் கீழமாசி வீதி தேரடி பகுதியில் விற்பனை செய்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தலா 100 முதல் 200 பைகள் என, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் பைகள் வரை விற்பனையாகும் என்கின்றனர் வியாபாரிகள்.
வியாபாரி தங்கராசு
"புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆட்டு தோல்களை மொத்தமாக கொள்முதல் செய்து கொண்டு வருவோம். பின், அதை சுண்ணாம்பு கரைசலில் சில வாரங்கள் ஊற வைத்து முடிகளை நீக்குவோம். பின்னர், ஆவார இலைகள், கடுக்காய் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பதப்படுத்தி ஒரு துணி போல மாற்றுவோம். அதை இங்கு கொண்டு வந்து சிறியவருக்கு ரூ.400, பெரியவருக்கு பையின் அளவை பொறுத்து ரூ.500 முதல் ரூ.700 வரை ஒரு பையை விற்பனை செய்கிறோம்" என்கிறார் வியாபாரி தங்கராசு.
தங்கராசு, தோல்பை வியாபாரி
"நான் வழக்கமாக காரியாபட்டியில் இருந்து தினமும் மதுரை கிளம்பி வந்து இங்கு வெள்ளரிக்காய் போன்ற ஏதேனும் பழம், காய்களை வாங்கி பேருந்து நிலையத்தில் விற்பனை செய்வது, அல்லது வேறு ஏதேனும் கூலி வேலைக்கு செல்வேன். திருவிழா நேரத்தில் இந்த தோல்பைகளை தயாரித்து கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வோம். இதில் எங்களுக்கு லாபம் நோக்கமே அல்ல. பல தலைமுறைகளாக இந்த வேலையை விடமால் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் இது அழகருக்கு செய்யும் ஒரு சிறு தொண்டு போல தான் செய்கிறோம்" என்கிறார் வியாபாரி வெள்ளையம்மா.
வெள்ளையம்மா, தோல்பை வியாபாரி
இதேபோல மூங்கில் கூடை மேல் துணியை சுற்றி, அதில் அழகரின் உருவத்தை பொருத்தி தயாரிக்கப்படும் தலைப்பாகையையும் மதுரை அனுப்பானடி, பெருங்குடி பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரியமாக செய்து விற்று வருகின்றனர். நாள் முழுவதும் அழகரின் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்பதால் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க காற்றோட்டம் இருக்கும் வகையில் இது உருவாக்கப்படுகிறது. தேரடிக்கு வந்தால் தலைப்பாகை தேவைப்படும் நபர்களுக்கு அவர்களின் தலை அளவுள்ள கூடையை தலையில் வைத்து அதன் மேல் துணியை சுற்றி உடனடியாக தலைப்பாகையை தயார் செய்து தருகின்றனர்.
முத்துக்கருப்பன், தலைப்பாகை வியாபாரி
"சித்திரை பவுர்ணமி நெருங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னதாகவே மூங்கில் கம்புகளை வாங்கி வந்து, அதை அறுத்து வளைத்து இது போல சிறு சிறு கூடைகளாக செய்வோம். கூடைக்கு 200 ரூபாயும், அதன் மேல் தலைப்பாகை வேலைப்பாடுகளுக்கு 150 ரூபாயும் என 350 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதில் எங்களுக்கு பெரிய அளவில் லாப நோக்கம் எதுவும் கிடையாது. அழகருக்கு சேவை செய்வது போலவே நினைத்து செய்கிறோம்"
என்கிறார் வியாபாரி முத்துக்கருப்பன்.
"இது எனக்கு பள்ளி விடுமுறை நாட்களாக இருப்பதாலும், இந்த தொழில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொடர வேண்டும் என்பதாலும் அப்பா, பெரியப்பாவுடன் வந்து இதைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் மாணவர் முத்துக்கள்ளழகர்
முத்துக்கள்ளழகர், இளையதலைமுறை தயாரிப்பாளர்
சித்திரைப் பெருவிழா எனும் பண்பாட்டுப் பெருநதியின் சிறு ஓடைகளாக பல நூற்றாண்டுகள் கடந்தும் தொடரும் இந்த தோல்பை, மூங்கில் தலைப்பாகை ஆக்கங்கள் குறித்த அறிதல் இன்னும் விரிவடைய வேண்டும் என்பதும், அதன் வழியாக இது போன்ற அறிவு நுட்பங்கள் காலா காலத்துக்கும் தொடர வேண்டும் என்பதுமே மக்களின் எண்ணமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.