முகப்பு /செய்தி /ஆன்மிகம் / உங்களுக்கு சூரிய தோஷம் இருக்கா? அப்போ இந்த விரதத்தை கடைபிடியுங்கள்..!

உங்களுக்கு சூரிய தோஷம் இருக்கா? அப்போ இந்த விரதத்தை கடைபிடியுங்கள்..!

சூரிய பகவான்

சூரிய பகவான்

Suriya Dhosham | உங்களின் ஜாதகப்படியோ, தசாபுத்தியின் படியோ சூரியனின் அமைப்பு சரியில்லை என்றால் தந்தை வழி உறவில் பாதிப்பு ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஆளக்கூடிய சூரியன், சிறப்பாக இல்லாவிட்டால் பூர்வீக சொத்து பிரச்னை, வில்லங்கங்கள் ஏற்படும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூரியன் பிதுர்காரகன். அவர் தந்தை வழி உறவில் மிக சாதக பாதகங்கள் அமைய காரணமாவார். எதிலும் ஆட்சி, அதிகாரத்துடன் இருக்க வைப்பவர். அரசு, அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சூரியனின் நற்பார்வை மேன்மையை தரும். அப்படி இல்லையேல் பிரச்னையை ஏற்படுத்தும். சூரிய தோஷம் உடையவர்கள், அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்பு பூவும் நீரும் கைகளில் ஏந்தி, சூரிய பகவானே எனது சூரிய தோஷத்தை போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கினால் நல்லது.

கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரை பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமை தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு, சிவப்பு பூ மாலை அணியலாம். சிவப்பு பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத் தரும். வீட்டியே சர்க்கரைப்பொங்கல் வைத்து அதனை சூரியனுக்கு அர்ப்பணித்து வணங்கும் முறை நல்லது.

சூரிய பகவானை வழிபடும் முறை: சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரியன் உதயத்திற்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்பு சூரிய உதயத்தின் போது, வீட்டிலிருந்து வெளியே வந்து, சூரிய பகவானைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி மனதார வணங்க வேண்டும்.

உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்வது அவசியம். ஆண்களாக இருந்தால் இரு கைகளையும் தலைக்கு மேல் பக்கமாக உயர்த்தி வணங்கி, சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்து கும்பிட்டு, சூரிய பகவானை வணங்கி நமஸ்காரம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.

முக்கியமான சூரிய வழிபாடு: சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது 'ரதசப்தமி'. இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.

பலன்கள்: சூரிய நமஸ்காரம் செய்தால் கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். வீட்டு வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சுபிட்சமும் மன நிம்மதியும் பெற்று வாழ்வோம் என்பது நம்பிக்கை.

சூரிய தோஷம் என்றால் என்ன? உங்களின் ஜாதகப்படியோ, தசாபுத்தியின் படியோ சூரியனின் அமைப்பு சரியில்லை என்றால் தந்தை வழி உறவில் பாதிப்பு ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஆளக்கூடிய சூரியன், சிறப்பாக இல்லாவிட்டால் பூர்வீக சொத்து பிரச்னை, வில்லங்கங்கள் ஏற்படும். தலை, கண்கள், வயிறு, ரத்தத்தில் பிரச்னை, பித்தம் அதிகரிப்பு என உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் ஏற்படலாம்.

அரசு தொடர்பான அனுகூலங்கள் கிடைப்பதில் தாமதம், சட்டப்புறம்பாக நடப்பவர்கள் மூலம் மிரட்டல் வரலாம். சிலருக்கு திருமண பாக்கியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். இவை அனைத்தும் ஜாதகத்தில் சூரியன் பாதக இடத்தில் அமைவதால் ஏற்படுகிறது. இதனை சூரிய தோஷம் எனப்படுகிறது.

சூரிய தோஷம் நீங்க எளிய பரிகாரம் :சூரிய தோஷம் இருப்பவர்கள், சூரியனின் அருள் பெற அனுமன் வழிபாடு செய்வது அவசியம். தாமிரத்தால் செய்யப்பட்ட இஷ்ட தெய்வ டாலர் அல்லது ஆஞ்சநேயர் டாலர் அணிவது நல்லது. சூரியனின் அருள் பெற ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய உதயத்திற்குள் நீராடி பூஜை அறையில் 5 அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

சூரியனின் அம்சமாக பார்க்கப்படும் கோதுமையை பசுமாட்டுக்கு கொடுப்பது, கோதுமை தவிடு கொடுப்பது மிகவும் சிறப்பான பலனைத் தரும். சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் படிப்பது அல்லது கேட்பது நல்லது.

பொதுவாக சூரிய தோஷம் இருந்தாலும் சரி சூரிய தோஷம் இல்லாதவர்களும் சரி, சூரிய உதயத்திற்கு முன் எழுந்து தங்களுடைய பணிகளை துவங்குவதால் சூரியனின் அருளை முழுமையாகப் பெறலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் நவகிரகத்தில் சூரியனை வழிபடுவது நன்மை தரும்.

First published:

Tags: Dhosham | தோஷம்