கல்லூரி விழாவிற்காக திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் அரசு பேருந்தில் பறையுடன் ஏறிய பெண்ணை பாதியில் இறக்கி விட்ட பேருந்து நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து இன்று நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசைக் கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தில்தான் வந்துள்ளார்.
கல்லூரியிலும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து மாலையில் சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் ஓட்டுநர் அனுமதித்தாலும், பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும் போது டிக்கெட் கேட்க வந்த நடத்துனர், மாணவியை தவறாக பேசி பறை இசை கருவிக்கு (கருமத்திற்கு) பேருந்தில் இடமில்லை எனக்கூறி பாதி வழியில் இறங்கச் சொல்லி உள்ளார்.
உடன் வந்த மற்ற பயணிகள் வற்புறுத்தல் காரணமாக பறை இசைக்கருவிகளுடன் சேர்த்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார் நடத்துனர்.
பாதி வழியில் இறங்கி நின்று தனியாக அழுது கொண்டிருந்த மாணவியின் நிலை பரிதாபகரமாக இருந்தது. உடனடியாக மாணவி நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் படிக்க... திருச்சியில் லாரி டீசல் டேங்க் வெடித்து விபத்து..
ஆனால் மாணவியை ஏற்றிச் செல்ல பேருந்துகள் எதுவும் வரவில்லை. அரை மணி நேரத்திற்கும் மேலாக வந்த பேருந்துகளை ஒவ்வொன்றாக நிறுத்தி மாணவியை பேருந்து ஏற்றி விட முயற்சித்த செய்தியாளர்களின் முயற்சி இறுதியாக பலித்தது. நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து நடத்துனர் பாஸ்கர், செய்தியாளர்கள் மூலம் மாணவியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மதுரையில் மாணவியை குறிப்பிட இடத்தில் இறக்கி விடுவதாக கூறி கொண்டு வந்த பறை இசை கருவிகளுடன் மாணவியை பேருந்தில் ஏற்றிச் சென்றார்.
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும் போது இசைக்கருவியோடு வந்த தன்னை தகாத வார்த்தையால பேசி இறக்கி விட்டதாகவும் கல்லூரி மாணவியான எனக்கு இந்த நிலை என்றால் இசைக்கருவியோட பயணம் செய்யும் நாட்டுப்புற கலைஞர்கள் நிலை பரிதாபமானதுதான். ஒரு பெண்ணை நடு ரோட்டில் இறக்கும்போது பேருந்தில் இருந்தவர்கள் யாரும் எதையும் கண்டு கொள்ளவில்லை. மனிதமே இல்லாத நிலை காணப்பட்டது என்றும் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அதனையடுத்து இன்று நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
செய்தியாளர்: ஐய்யப்பன், திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Music, Sivagangai