ஆத்தூர் அருகே வீரகனூர் ஏரிக்கரை பகுதியில் அதிகாலை முதலே படுஜோராக சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாரயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தால் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தி வரப்பட்டு ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் வீடியோ ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விஷச்சாராயத்தை ஒழிக்க ஆத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் தற்காலிக சோதனைசாவடி மற்றும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போலீசாருக்கே சவால் விடும் விதமாக கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச் சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சாராய பாக்கெட்டுகளை வாங்க அதிகாலை முதலே குடிமகன்கள் குவிந்துள்ளனர். சாராய பாக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதால் கூலித் தொழிலாளர்கள், மது போதைக்கு அடிமையாகி வேலையிழந்து வருகின்றனர். சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும் போலீசார் சாராய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு கல்லாகட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகமும் காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு சாராய விற்பனையை தடுத்து சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Salem