சேலம் மாவட்டத்தில் அனைவரும் அறிந்த சுற்றுலாத்தலம் ஏற்காடு. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். ஆனால், வண்டலூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய உயிரியல் பூங்காவாக விரிவுபடுத்தப்பட்டுள்ள சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா பற்றி சேலத்தில் உள்ளவர்களுக்கே பலருக்கு தெரியாமல் உள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. முதலில், 27 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட பூங்கா பின்னர் 80 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு, விலங்குகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. மரங்கள், செடி, கொடிகள் அடர்ந்த பகுதியில் இந்த பூங்கா அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
இங்கு பல்வேறு வகையான குரங்குகள், புள்ளி மான்கள், வெள்ளை மயில், முதலை, ஆமை, மலைப் பாம்பு, சாம்பல் நாரை, கிளி, மற்றும் சில வெளிநாட்டுப் பறவைகள் உள்ளிட்டவைகள் கூண்டுகளிலும், திறந்த வெளியிலும் விடப்பட்டுள்ளது. செயற்கை நீர் வீழ்ச்சி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர் பூங்கா மற்றும் குழந்தைகள் பூங்கா தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றிப் பார்க்க, உயிரியல் பூங்கா முழுவதும் அழைத்து செல்வதற்காக, கட்டண வசதி பேட்ரி வாகனங்களும் இயக்கப்படுகிறது.
நாள் முழுவதும் சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியுடன் பொழுதை போக்கும் வகையில் சிறந்த சுற்றுலாத்தலமாக இந்த குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது.
சேலம் மாநகர் அஸ்தம்பட்டியிலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் கோரிமேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடது புறமாக செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதிகபடியான பேருந்து போக்குவரத்து இல்லாததாலும், மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளதாலும் இந்த பூங்கா பொதுமக்களுக்கு அதிக பரிச்சயம் இல்லாமல் உள்ளது.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு, இந்த பூங்காவை 170 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த பூங்காவை மேம்படுத்த முதற்கட்டமாக 8.5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. பூங்காவிற்குள் வனவிலங்குகளுக்கு மருத்துவம் செய்யும் வகையில் கால்நடை மருத்துவமனை மற்றும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் வழங்குவதற்கான தனி அறைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வனத்துறை குறித்து தெரிந்து கொள்ள தனி அறைகள் கட்டப்பட உள்ளது.
அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Salem