சேலத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடை பாருக்குள் மதுக்குடிப்போரை உள்ளே வைத்து பூட்டு போட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்களில் இரவு முழுவதும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக அவ்வப்போது புகார் எழுந்தது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே சாந்தி தியேட்டர் பகுதியில் இயங்கி வரும் மதுபான கடையை ஒட்டி சண்முகம் என்பவருக்கு சொந்தமான பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் காலை 5 மணிக்கே சட்டவிரோத மது விற்பனை செய்யப்படுவதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சிலர் உள்ளே மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அந்த பாருக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய வாலிபர் சங்கத்தினர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் மாநகரில் இதுபோன்று சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
குறிப்பாக சர்ச்சைக்குரிய இந்த டாஸ்மாக் பாரானது சேலம் நகர காவல் நிலையம், சேலம் தெற்கு சரக உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு அருகில் இருந்தும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதை அடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பூட்டிய பாரை திறந்தவுடன் உள்ளே கதவை திறக்க சொல்லி கூச்சலிட்டுக் கொண்டிருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் வாசிக்க: கோடைக்காலம் வருது.. டாஸ்மாக்கில் பீர் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்... எழுந்த கோரிக்கை..!
இதில் சில குடிமகன்கள் முகத்தை மூடியபடியும், சிலர் கெத்தாகவும் வெளியே வந்தனர். இதில் முதியவர் ஒருவர் மது போதையில் தடுமாறி கீழே விழுந்ததையும் பார்க்க முடிந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.