Home /ramanathapuram /

எம்.பி பதவி கோரும் மீனவர்கள்.. மதமாற்றம் செய்ய நெருக்கடி.. ராமநாதபுரம் மாவட்டசெய்திகள்..

எம்.பி பதவி கோரும் மீனவர்கள்.. மதமாற்றம் செய்ய நெருக்கடி.. ராமநாதபுரம் மாவட்டசெய்திகள்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District:  ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் மதமாற்றம் செய்ய வற்புறுத்தல் பெண் தீக்குளிக்க முயற்சி முதல் அரசு பேருந்தில் சிக்கி பள்ளி மாணவன் பழி வரை ஒருசில வரிகளில்   காண்போம்...

மேலும் படிக்கவும் ...
   மதமாற்றம் செய்ய வற்புறுத்தல் பெண் தீக்குளிக்க முயற்சி முதல் அரசு பேருந்தில் சிக்கி பள்ளி மாணவன் பழி வரை.. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் - ஒருசில வரிகளில் காண்போம்...

  மதமாற்றம் செய்ய நெருக்கடி – மன உளைச்சலில் தீக்குளிக்க முயற்சி

  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் கருப்ப குடும்பன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில் இருந்து கிருஸ்த்துவ மதத்திற்கு மாற்ற அக்கிராமத்தில் உள்ள கிருஸ்தவர்கள் கட்டாயப்படுத்தி தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதோடு வளர்மதியின் மகனை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

  இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சல் அடைந்த வளர்மதி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

  இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  பனை மரத்தில் மோதிய வேன்; ஒருவர் பலி 10 பேர் படுகாயம்

  தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் சுற்றுலாவுக்காக ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது உச்சிப்புளி ரயில்வே கேட் அருகே உள்ள பனை மரத்தில் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் நவநீதன் பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

  தகவலறிந்த உச்சிப்புளி காவல்துறையினர்  விரைந்து வந்து சம்பவ இடத்தில் பலியான ஓட்டுநர் மற்றும் காயம்பட்டவர்களை மீட்டு , ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உச்சிப்புளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

  மீனவர்களுக்கு அரசியல் கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வழியுறுத்தியும் மற்றும் இலங்கை வசம் உள்ள மீன்பிடி படகுகளை மீட்க வழியுறுத்தியும் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.

  அனைத்துக்கட்சி மீனவர் சங்க கூட்டம் தங்கச்சிமடத்தில் நடைபெற்றது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, வரும் 20- ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

  அரசு பேருந்தில் மோதி 11-ம் வகுப்பு மாணவன் பலி

  பரமக்குடி பங்களாரோடு பகுதியை சேர்ந்தவர் லிங்கதுரை. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகன் கவின்குமார் ( 17) பரமக்குடியில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

  கவின்குமார் அவரது நண்பரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் கவின்குமார் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதையடுத்து, பரமக்குடி‌ காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  பேரிடர் மேலாண்மை பயிற்சி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்படுகிறது

  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி தன்னார்வலர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

  திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு அலுவலர்கள் பயிற்சிஅளித்தனர்.

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; இந்து தேசிய கட்சியினர் கைது

  யூடியூப் இணையதளத்தில் யூடூ புரூட்டஸ் என்ற பெயரிலான சேனலில் இந்து மதத்தை அவதூறாக சித்தரித்து வெளியிடப்பட்ட வீடியோவை நீக்கம் செய்யவும் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சி சார்பில் அரை நிர்வாண போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில் இந்து தேசிய கட்சியினர் அரைநிர்வாண போராட்டம் நடத்த முயன்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

  குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை

  பரமக்குடி பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தத்தில் 50 வயது மதிக்கத்தக்கவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். வாயில் நுரை தள்ளியபடி கிடந்த காவல்துறையினர் விரைந்து வந்து மயங்கி கிடந்தவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  இதையடுத்து, அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் இறந்த நபர் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த ரவி (50) என தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

  கார் பாலத்தில் மோதி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்

  நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வளமாவூர் விலக்கு பகுதியில் கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகே உள்ள பாலத்தில் மோதியது சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்ற ஏழு நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பாலைக்குடி காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  வானிலை அறிக்கை

  பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

  காற்றின் வேகம்: 35முதல் 50 கிமீ/ம வரை
  வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக உள்ளது

  காற்றின் திசை: தென்மேற்கு
  மழைக்கான வாய்ப்பு உண்டு.

  இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

  கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரே விலையாக நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த மாதத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.

  ராமநாதபுரம்

  பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

  ராமேஸ்வரம்

  பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

  பரமக்குடி

  பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

  திருவாடானை

  பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

  செய்தியாளர்: பூமனோஜ்குமார், ராமநாதபுரம்.
  Published by:Arun
  First published:

  Tags: Ramanathapuram

  அடுத்த செய்தி