ஹோம் /ராமநாதபுரம் /

“கடலில் மூழ்கி செத்தாலும் பரவாயில்லனு தமிழகத்துக்கு கிளம்புனோம்” - தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகள் குமுறல்!

“கடலில் மூழ்கி செத்தாலும் பரவாயில்லனு தமிழகத்துக்கு கிளம்புனோம்” - தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகள் குமுறல்!

தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகள்

தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதிகள்

Srilankan Refugees at Rameswaram | இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் இலங்கையில் இருந்து 3 மாத கைக்குழந்தையுடன் 3 குடும்பங்களை சேர்ந்த மேலும் 10 பேர் ஃபைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி வழியாக நடுத்துறை வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள், தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் இரவு 7 மணியளவில் மன்னார் பகுதியிலிருந்து ஒரு ஃபைபர் படகில் புறப்பட்டு இரவு 11:50 மணியளவில் தனுஷ்கோடி வழியாக வந்து நடுத்துறை பகுதிக்கு வந்துள்ளனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மெரைன் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க உள்ளனர்.

இதையும் படிங்க : ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த விசைப்படகுகள்.. இழப்பீடு வழங்க மீனவர்கள் வலியுறுத்தல்..

இந்நிலையில், அகதிகளாக வந்தவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அவுஸ்யா அவரது மூன்று மாத குழந்தை, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி அவரது இரு மகள்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் மற்றும் ஆகியோர் அகதிகளாக வந்துள்ளனர் என தெரியவந்தது.

படகில் வரும்போது பயமாக இருந்தது : 

இதுகுறித்து அகதியாக வந்த புஷ்பம் கூறியதாவது, “இலங்கையில் விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்தாலும், பணம் இருந்தால் கூட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது‌. குழந்தைகளை வைத்து பாதுகாத்து வாழ முடியாத சூழல் நிலவுகிறது.

சர்க்கரை ரூ.300, அரிசி ரூ. 250, பால் ரூ. 200க்கும் விற்கப்படுகிறது. இதனால் கூலித்தொழில் செய்து பிழைக்கும் எங்களால் அங்கு வாழ முடியாத நிலை இருக்கிறது. உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றால் மருந்து மாத்திரை தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்துகளை வெளியில் வாங்கவதால் பணம் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு உள்ளோம்.

படகில் வரும்போது பயமாகதான் இருந்தது. உயிரை பணயம் வைத்து வந்தோம். மழையினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினோம். அங்கு வாழ்வதை விட படகில் வரும்போது இறந்தால் கூட பரவாயில்லை என்று எண்ணி இங்கு வந்துள்ளோம்‌.

இதையும் படிங்க : ராமேஸ்வரத்தில் கடல் மண்ணில் உருவான சுயம்பு அபய ஆஞ்சநேயர் கோயில் வரலாறு தெரியுமா?

மேலும், மூன்று மாத கை குழந்தையை பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு மத்தியில் பாதுகாத்து கொண்டுவர மிகுந்த கஷ்டமாக இருந்தது. பைபர் படகில் ஒரு நபருக்கு ஜம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலும் கொடுத்து வந்தோம்” என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram