தனுஷ்கோடியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக புயலில் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை மற்றும் கான்கிரீட் குழாய்கள் தற்போது வெளியே தெரிகிறது. ஆண்டுதோறும் கடல் அரிப்பு காலத்தில் கான்கிரீட்குழாய்கள் வெளியே தெரிவது இயல்பான ஒன்று என அப்பகுதி மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறைக்காற்று வீசுவதுடன் கடல் சீற்றம் காணப்பட்டு வருகிறது. இதனால் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இருந்து பழைய தேவாலயம் வரையிலான இடைப்பட்ட கடற்கரை பகுதி முழுவதும் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், 1964-ம் ஆண்டுகளுக்கு முன்பு தனுஸ்கோடி பகுதியில் கான்கிரீட் குழாய்கள் வழியாக தெற்கு கடல் பகுதியிலிருந்து கடல் நீரானது வடக்கு பகுதிக்கும், வடக்கு கடல் பகுதியில் உள்ள கடல் நீரானது கடலிலும் தென் கடல் பகுதிக்கு சென்று சேரும் வகையில் தரைப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர் 1964–ம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக தரைப்பாலம் கடலில் முழ்கியது. தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக கடலில் முழ்கிய கான்கிரீட் குழாய்கள் வெளியே தெரிகிறது.
ஆண்டுதோறும் கடல் அரிப்பு காலத்தில் தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் 1964ல் போடப்பட்ட பழைய தேசிய நெடுஞ்சாலையின் சேதமடைந்த பகுதிகள் புயலுக்கு முன்பு இருந்த சாலை உள்ளிட்டவைகள் ஆண்டுதோறும் தெரிவது வழக்கமான ஒன்று என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.