ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலும் ஒலித்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நகரா இசைக்கருவி மீண்டும் ஒலிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட்ட வடிவம் கொண்ட மாட்டுத்தோலினால் ஆன இசைக்கருவி தான் இந்த நகரா. இந்த நகராவானது பழமையான கோவில்களில் பூஜையின் போது முன்னறிவிப்பிற்காக ஒலிக்கப்படுகிறது.
விஷேச நாட்கள், திருவிழாக்காலம், பண்டிகை நாட்கள், பூஜை வேளைகள், சுவாமி ஊர்வலம் போன்றவற்றில் இந்த நகரா இசைக்கருவியானது இடம் பெற்றிருக்கும், இதை இசைக்க வளைந்த குச்சிகளையே பயன்படுத்துவார்கள்.
மன்னர் சேதுபதி காலத்தைச் சேர்ந்த 300 ஆண்டுகள் பழமையான 2 நகராக்கள் இருந்தன. இந்த நகராக்களில் இசைக்கும் போது எழுப்பப்படும் ஓசையானது, கடல் கடந்து இலங்கையில் உள்ள தலை மன்னார் வரையிலும் ஒலிக்கும் என்று கூறுகின்றனர்.
ராமேஸ்வரம் கிழக்கு கோபுரம் எதிரில் 5 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட நகரா ஒன்று காட்சிப்பொருளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது . மற்றொரு நகரா முற்றிலும் சேதமடைந்து விட்டது. ஆனால் , ராமேஸ்வரம் கோவிலில் நகரா உள்ளிட்ட பல பக்க வாத்தியங்களை இசைப்பது கிடையாது.
நகரா மண்டபத்தில் இருந்து தினமும் எழுப்பப்படும் ' தொம் ... தொம் ' என்ற கம்பீர ஓசைகளை வைத்தே முந்தைய காலங்களில் ராமேஸ்வரத்தில் பள்ளி தொடங்கும் நேரம் , இடைவேளை நேரம் போன்றவற்றை மாணவர்கள் அறிந்துகொள்வர்.
கடலில் இருக்கும் கட்டுமரம் , பாய்மரப் படகு மற்றும் இயந்திரம் பொருத்தப்படாத பாரம்பரிய மீனவர்கள் நகரா ஒலிக்கும் திசையை கொண்டு கரையை வந்தடைவார்கள் . கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நகரா ஒலிக்கப்படுவதே இல்லை . முறையான பராமரிப்பில்லாததால் ஒரு நகரா முற்றிலும் அழிந்து விட்டது. மற்றுமொரு நகராவும் தூசு படிந்து விரைவில் சேதமடையும் நிலையில் உள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் 100 வருடங்களுக்கும் மேலாக இன்று வரையிலும் நகராக்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதே போல ராமேஸ்வரத்திலும் மீண்டும் நகரா இசை ஓசையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.