மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், இன்று அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்களுக்கான உரிய விலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன் பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடை கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலையில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் உற்சாகமாக சென்றனர். இதையடுத்து, ராமேஸ்வரத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்களை நினைத்ததை விட அதிக அளவில் மீன் வரத்து கிடைத்துள்ளது,
இந்நிலையில், சிறிய விசைப்படகுகள் அதிகாலையில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து கரைக்கு வந்து மீன்களை கரையில் இறக்கி விட்டு மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். பெரிய விசைப்படகுகளில் கொள்ளளவு அதிகமாக இருப்பதால் அவை நாளை அதிகாலையில் கரை திரும்புகின்றன.இறால், நண்டு, கணவாய், காரை மீன்கள் மீனவர்களின் வலைகளில் அதிகமாக சிக்கி உள்ளது.
மீன்களுக்கான உரிய விலை கிடைக்க வேண்டும் என்றும் இலங்கை கடற்படையிடம் இருந்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், 61 நாட்கள் மீன் பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.