இன்று ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்ததால் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற விஷேச நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரே நட்சத்திரத்தில் அமையக்கூடிய விசேஷமான அமாவாசை இன்று என்பதால் அதிகாலையில் அக்னி தீர்த்தக் கடலில் பித்ருக்களுக்கு பிண்டம், எள்ளு வைத்து தர்ப்பணம் செய்து, முன்னோர்களை வழிபட்டனர். மேலும், அமாவாசையையொட்டி ஆயிரகணக்கானோர் குவிந்ததால் வழக்கத்திற்கு மாறாக ராமேஸ்வரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சுமார் முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்..
வாகனம் நிறுத்தும் இடத்தில் இடப் பற்றாக்குறையால் தெருக்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தனர். இதன் காரணமாக உள்ளூர் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்..
ஆடி அமாவாசையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்னி தீர்த்தம், சேதுக்கரை, அரிச்சல்முனை, மாரியூர், தேவிபட்டிணம், தீர்தத்தங்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல் மற்றும் நீர் நிலைகளில் பக்தர்கள் அதிகளவு கூடி புனித நீராடி வருகின்றனர். தென்மாவட்டங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகளும் மற்றும் மதுரையில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்..
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1,000 காவலர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலின் நான்கு ரத வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவில் நுழைவு வாயில்களில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பின் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்..
அமாவாசை நாளில் திதி, தர்ப்பணம் தொடங்கிய வரலாறு
ராமன் இலங்கையில் ராவணனுடன் போரிட்டு வதம் செய்து வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பிரம்மஹத்தி தோஷம் நீங்க அக்னி தீர்த்தம் கடற்கரையில் பரிகாரம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து, இங்கு முன்னோர்களுக்கு, திதி - தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் தோன்றியுள்ளது.

ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்..
பக்தர்களின் கோரிக்கை
போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது, அதனை கட்டுப்படுத்த வேண்டும். ராமேஸ்வரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருவோருக்கு குடிநீர் வசதி முறையாக இல்லை.. வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இடப்பற்றாக்குறையால் சாலைகளிலும் தெருக்களிலும் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்து தர வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதே போல, அதிக கூட்டம் என்பதால் உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதுபோன்ற நாளில் உணவகங்களிலின் உணவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.