Home /ramanathapuram /

குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் ஆசிரியர்... யார் இந்த ராமச்சந்திரன்?

குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் ஆசிரியர்... யார் இந்த ராமச்சந்திரன்?

நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்

நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் நல்லாசிரியர் விருது பெற்றார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மத்திய அரசின் நல்லாசிரியர் விருது குடியரத் தலைவரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கு 46 பேர் ‘தேசிய நல்லாசிரியர் விருது’க்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது அவருக்கு வழங்கி பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். ராமச்சந்திரன் பள்ளி சீருடையில் சென்று விருது பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

    நல்லாசிரியர் விருது பெறும் ராமச்சந்திரன்


    யார் இந்த நல்லாசிரியர் ராமசந்திரன்:

    ராமசந்திரன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள செம்பொன்குடி தொடக்கப் பள்ளியில்படித்தார். பின்னர், 10, 12ஆம் வகுப்புகளை ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தார். பின்னர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்ரபை தொடர முயன்ற நிலையில், அவருக்கு அங்கே இடம் கிடைக்கவில்லை.

    டீக்கடையில் வேலை:

    அப்போது, குடும்ப வறுமை காரணமாக மதுரையில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். அவருக்கு உடனே வேலை கிடைக்கவில்லை இதனால், மூன்று ஆண்டுகள் திருப்பூரில் வேலை செய்தார்.

    இந்நிலையில், ராமசந்திரனுக்கு 2005ஆம் அண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.வி பட்டினத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி கிடைத்தது. அவர், பணியில் இருந்து கொண்டே பி.எஸ்.சி கணிதம், பி.எட், எம்.எஸ்.சி. கணிதம் ஆகியவற்றை படித்தார்.

    இதனைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு போகலூர் ஒன்றியம் செவ்வூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றார். பின்னர், 2008ஆம் ஆண்டு போகலூர் ஒன்றியம் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டு தற்போதுவரை அந்தப் பள்ளியிலேயே பணியாற்றி வருகிறார். ராமச்சந்திரன் 2018ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றார். மேலும், பல்வேறு அமைப்புகள் அவரின் சேவையை பாராட்டி விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்துள்ளன.

    மாணவர்களுக்கு ராமச்சந்திரன் செய்தது என்ன?

    ராமசந்திரன் பணியாற்றும் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பில் முதல் 5ஆம் வகுப்பு வரை 30 மாணவ - மாணவிகள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஐசிடி (Information Communication Technology) தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார். அதனை கொண்டு மாணவர்களின் படிப்பு தரத்தை மேம்படுத்தி வருகிறார்.

    அத்துடன், டேப்லெட் மற்றும் லேப்டாப் பயன்பாடு, பியானோ வாசிப்பு, அபாகஸ், ஓவியம், சிலம்பம் என மாணவர்களின் தனித் திறனை வளர்க்கும் பயிற்சிகளை கொடுத்து வருகிறார். பள்ளிக்கு யூடியூப் பக்கத்தை உருவாக்கி வீடியோக்களையும் பதிவேற்றியுள்ளார். பள்ளி முழுவதையும் வண்ண மயமாக மாற்றி அமைத்துள்ளார். அத்துடன், பள்ளி வளாகத்தை பசுமையாக வைக்கும் வகையில் மூலிகை தோட்டத்தையும் அமைத்துள்ளார். இந்த பள்ளிக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று கொடுக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களின் முன்னேற்றமே எனது லட்சியம்:

    தனது பணி காலம் முடியும் வரையில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியைத் வழங்க பாடுபடுவேன் என்றும் மாணவர்களின் முன்னேற்றமே தன்னுடைய லட்சியம் என்றும் கூறும் ராமச்சந்திரன் தினமும் பள்ளி சீருடையிலேயே பள்ளிக்கு வருகிறார். வாரம் ஒரு முறை மாணவர்கள் வாசிக்கும் திறன் மற்றும் நினைவுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகளை நடத்தி அவர்களுக்கு ‘பொற்காசு’ திட்டத்தின் கீழ் நாணயங்களைப் பரிசாக வழங்கி அதை கொண்டே மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்களை வாங்க துணைபுரிகிறார்.

    தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், திரவியம் ராஜ் என்ற மகனும் உள்ளனர். மகன் சொந்த ஊரான செம்பொன்குடி அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய நல்லாரிசியர் விருது பெற்ற ராமச்சந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி