ஹோம் /ராமநாதபுரம் /

அமெரிக்காவில் புத்தகம் எழுதப்பட்ட ராமேஸ்வரம் ஸ்ரீநம்பு நாயகி அம்மன் ஆலயத்தின் வரலாற்று சிறப்புகள்

அமெரிக்காவில் புத்தகம் எழுதப்பட்ட ராமேஸ்வரம் ஸ்ரீநம்பு நாயகி அம்மன் ஆலயத்தின் வரலாற்று சிறப்புகள்

X
ஸ்ரீநம்பு

ஸ்ரீநம்பு நாயகி அம்மன் ஆலயத்தின் வரலாற்று சிறப்புகள்

Ramanathapuram Nambu Nayaki amman | ராமநாதபுரத்திலுள்ள நம்பு நாயகி அம்மன் 600 ஆண்டுகள் பழமை கொண்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

சுவாமி சன்னதியில் வைத்து மஞ்சள் அரைத்து உண்டால் வேண்டியதை நிறைவேற்றும் அடர்ந்த வனத்தின் நடுவில் வீற்றிருக்கும் நம்புநாயகி அம்மன் கோவில் உருவான வரலாறு சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பெரும் மதிப்பு பெற்ற கோவிலாகவும், ராமேஸ்வரம் உள்ளூர் மக்களின் பெரும்பாலான குலதெய்வமாகவும் நம்புநாயகி அம்மன் ஆலயம் விளங்குகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 6 கி.மீ தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில் புதுரோடு பகுதியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு புது வருடத்தின் முதல் நாள் மற்றும் தசரா திருவிழாவிற்காக இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். 14-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை, ராமேஸ்வரத்தை சேர்ந்த உள்ளூர்வாசிகளே கட்டி வணங்கி வருகின்றனர். கி.பி.1830-ல் இந்த ராமநாதசுவாமி கோவில் சமஸ்தானத்துடன் சேர்ந்து அறநிலையத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயமானது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். இக்கோவிலை சுற்றிலும் தனுஷ்கோடி மண்ணால் மேடு மேடாக அமைந்திருக்கும். அப்பகுதி மக்களின் குல தெய்வமாகவும் விளங்குகிறது.

இதையும் படிங்க : புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..

அப்பகுதியில் உள்ளவர்களின் பெயர்களில் நம்பு என்ற பெயரை வைத்துதான் பெயர் வைப்பார்கள். சுற்றிலும் ஆலமரங்கள் அமைந்துள்ள இக்கோவிலுக்கு சென்று ஆலமரத்தடியில் அமர்ந்தால் மனநிம்மதி உண்டாகும் என்பதால் தினந்தோறும் உள்ளூர் மக்கள் சென்று மனநிம்மதி தேடி வணங்கி வருகின்றனர்.

இந்த கோவிலில் குழந்தை வரம், திருமண வரம் வேண்டி விரலி மஞ்சளை அம்மியில் வைத்து அரைத்து அம்பாளின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பின் இங்கு வந்து அதை சாப்பிட்டால் நினைத்தது நடைவேறும் என்பது ஜதீகம். இந்த ஐதீகத்தால் வரங்கள் வேண்டி தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து வேண்டுகின்றனர்‌.

அம்மனிடம் வேண்டும் வேண்டுதலும் விரைவில் நடக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர். இணையத்தில் இக்கோவிலைப் பற்றி அறிந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பலரும் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இக்கோவிலில் தலவரலாறு என்னவென்றால் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் முழுவதும் தாழை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. பார்ப்பதற்கு அழகிய வனமாக தாழை மரங்கள் சூழ்ந்து காட்சி அளிக்கப்பட்டிருந்தது.

அப்போது வீட்டில் சமையல் செய்வதற்கு தேவையான விறகிற்காக தாழை மரம் ஒன்றை வெட்டும்போது மரத்திலிருந்து ரத்தம் போன்று வந்துள்ளது. அப்போது மரம் வெட்டியவர் பயந்து ஓடி சென்று ஊர் மக்களிடம் கூறியுள்ளார். ஊர் மக்கள் ஒன்று திரண்டு அம்மரத்தை பார்த்தனர்.

மரத்தில் ரத்தம் வந்த இடத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒருவர் சாமி ஆடதொடங்கினார். அப்போது அவர் ''இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள்” என்று கூறியுள்ளார்.

ரத்தம் பீறிட்ட இடத்தில் விரலிமஞ்சளை வைத்து பூசினர். ரத்தம் நின்றது. பூமியில் மறைந்து இருந்த அம்மனை பூமியிலிருந்து தோண்டி எடுத்தனர். சிறுகூரையில் கோவில் அமைத்து வழிபாடு செய்தனர். அது முதல் அப்பகுதி மக்கள் எவ்வித குறையுமின்றி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

பின்பு காலப்போக்கில் இக்கோவிலை குலதெய்வமாக வழிபடுபவர்கள் மற்றும் ராமநாதசுவாமி சமஸ்தானத்துடன் இணைந்து கோவில் கட்டப்பட்டது. அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால் தாழை அம்மன் நம்பு நாயகி அம்மனாக என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நம்பு நாயகி அம்மன் ஆலயமானது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்வளவு பெருமை கொண்ட இந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி அறிந்து அமெரிக்கா கலிபோர்னியாவில் நம்பு சென்டர் என்ற மையம் அமைத்து மஞ்சள் அரைத்து உண்டால் எவ்வாறு வேண்டுதல் நிறைவேறுகிறது என்று புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நம்பு நாயகி அம்மன் ஆலயத்திற்கு அமெரிக்காவில் இருந்து 300 நபர்கள் வந்து புத்தகம் வெளியிட உள்ளனர்.

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram