கச்சத்தீவு திருவிழாவிற்கு அனுமதிக்க கோரி இராமாநாபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வருகின்ற மார்ச் 11 மற்றும் 12- ம் தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடக்க இருக்கிறது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் தமிழக பாரம்பரிய மீனவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வழிபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து, மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி கூறுகையில்:- 1974-ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கை வசம் சென்றாலும் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள 5 சரத்துப்படி, இந்திய திருப்பயணிகள் இலங்கை அரசிடம் குடியுரிமை அனுமதி எதுவும் இல்லாமல் கச்சத்தீவு சென்று புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்கலாம்.
கச்சத்தீவு திருவிழா இருநாட்டு நட்புறவு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இருநாட்டு மீனவர்களும் சந்தித்து தங்களது நட்பை பகிர்ந்து கொள்வார்கள். எனவே, இருநாட்டு மீனவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள்.
கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள கொரோனாவை காரணம் காட்டி தமிழக மீனவர்களுக்கு இலங்கை தடை விதிப்பதை ஏற்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா விதிமுறை ஆய்வுகளை கடைபிடித்து 200 இந்திய திருப்பயணிகள் கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குனரிடம் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது என்றார்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fishermen, Ramanathapuram