முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் 800 ஆண்டுகள் பழமையான சூலக்கல், கல்வெட்டு கண்டெடுப்பு 

ராமநாதபுரத்தில் 800 ஆண்டுகள் பழமையான சூலக்கல், கல்வெட்டு கண்டெடுப்பு 

X
கண்டெடுக்கப்பட்ட

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு

ராமநாதபுரத்தில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூர் பகுதியில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாண்டியர் கால சூலக்கல், கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கிபி 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது என்றும், முதலாம் குலோத்துங்கசோழன் தன் பெயரிலும், தன் பாட்டி பெயரிலும் நல்லூர்களை உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது என்று ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் ஓரியூர் கீழக்குடியிருப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்துள்ளார்.

சூலக்கல் 

இந்தக் கல்வெட்டு குறித்து பேசிய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தலைவர் ராஜகுரு, ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் திருவாடானை ஓரியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மன்னர் ஆட்சி காலத்தில் கோவில்களில் தினமும் வழிபாடு நடைபெறுவதற்காக விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை விலக்கி கோவில்களுக்கு தானாமாக வழங்கி வந்துள்ளனர்.

கல்வெட்டு ஆய்வில் அதிகாரி

ஓரியூர் கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் இரண்டு அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சில எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளதாகவும் கூறினார்.

கல்வெட்டு

சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையில் திரிசூலம் பொறித்த சூலக்கற்கள் நடுவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் பாண்டியர் கால சூலக்கற்களில் கல்வெட்டு இருப்பதில்லை சூலம் மட்டுமே இருக்கும் என்றார்.

ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கி உ என கல்வெட்டு முடிகிறது. உடையார் திருப்புனவாயிலுடைய நாயனார் தேவதானம் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி காராண்கிழமை நின்ற நிலையன்றாதானான் உலகுய்யவந்த நல்லூர் என கல்வெட்டில் எழுதப்பட்டதாக கூறினார்.

இதற்கு என்ன அர்த்தம் என்றால் புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் சிவன் கோயிலுக்கு ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி தேவதானமாக கொடுக்கப்பட்டுள்ளது. தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் பயிரிடும் உரிமை உலகுய்யவந்த நல்லூரைச் சேர்ந்த நின்ற நிலையன்றாதானான் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது நிலத்தில் பயிரிடும் உரிமை வழங்கும் கல்வெட்டு என்றும், தற்போது ஓரியூர் எனப்படும் ஊர் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் எனவும் அதன் ஒரு பகுதியான கீழக்குடியிருப்பு கீழைக்குறுச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது. ஓரியூர் கீழக்குடியிருப்பு திருப்புனவாசல் சிவன் கோயிலுக்கு தேவதானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்புனவாசல் ஓரியூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இதில் உலகுய்யவந்தான் என்பது முதலாம் குலோத்துங்க சோழனுடைய சிறப்புப் பெயர். வானவன் மாதேவி என்பவர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவியும், முதலாம் குலோத்துங்க சோழனின் தாய் வழி பாட்டியும் ஆவார். இதில் வானவன் மாதேவி நல்லூர் தற்போதைய ஓரியூர் ஆகும். தன் பெயரிலும், தன் பாட்டி பெயரிலும் முதலாம் குலோத்துங்கசோழன் நல்லூர்களை உருவாக்கியுள்ளதை அறிய முடிகிறது.

ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோயில் கல்வெட்டுகளில் இல்லை என்றும், எழுத்துகளைக் கொண்டு கல்வெட்டு கி.பி.13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது என்று கூறலாம் என்று தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram