பாம்பன் பகுதி மீனவர்கள் தங்களின் மீன்பிடி விசைபடகுகளை மராமத்து பணி செய்வதற்கு பலூன்களை பயன்படுத்தி கரையில் ஏற்றி மராமத்து பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் பலூன்கள் உதவியுடன் கடலில் இறக்குகின்றனர்.
மீன்பிடி தடைகாலத்தையொட்டி பாம்பன் பகுதியில் விசைப்படகு மீனவர்களுக்கு தங்களது உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 15 முதல் ஜூன் 16 வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்ய ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் இந்த குறிப்பிட்ட காலத்திற்கு தடை விதித்து வருகின்றன. இதையடுத்து, வழக்கம்போல் இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி மீன் பிடி தடைக்காலம் துவங்கி அமலில் இருந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் தடை காலம் முடிந்து மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் நேரங்களில் படகுகளையோ, வலைகளையோ மற்றும் மற்ற உபகரணங்களையோ சீரமைப்பு செய்வது முடியாத காரியம். எனவே அரசு அறிவிக்கக்கூடிய இந்த தடைகாலத்தை பயன்படுத்தி படகு, வலை மற்றும் உபகரணங்களை பழுதுபார்ப்பது மீனவர்களின் வழக்கம்.
இந்த தடைகாலத்தால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் 112 மீன்பிடி விசைப்படகுகள் உள்ளது. இவைகளில் மராமத்து பணி செய்ய ரப்பர் பலூன்களை பயன்படுத்தி மீன்பிடி படகுகளை கரைக்கு எடுத்து வந்து மராமத்து பணிகள் பார்த்து வர்ணம் தீட்டி வருகின்றனர்.
இந்த பலூன்கள் வருவதற்கு முன்பு ஒரு விசைபடகை கடலில் இருந்து கரையில் ஏற்றுவதற்கு ஒரு நாள் முழுவதும் தேவைப்படும். ஆனால் இந்த ரப்பர் பலூன்களை பயன்படுத்துவதால் இரண்டு மணி நேரத்திலேயே கடலிலிருந்து படகை கரைக்கு ஏற்றிவிடுகின்றனர்.
மேலும் மீன்பிடி தொழிலுக்கு உயிர் நாடியாக உள்ள உபகரணங்களை பழுதுபார்க்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.