சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்குடி எம்.பி அலுவலகத்தில் இரத்த தான முகாம் நடந்தது. முகாமை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். பின்னர் ராஜிவ்காந்தி சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘2,000 ரூபாய் தாளை விலக்கி கொள்கிறோம் என்று அரசு அறிவித்திருப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. 2,000 ரூபாய் தாளை அறிமுகம் செய்ததே தவறு. 500 ரூபாய் தாள், ஆயிரம் ரூபாய் தாளில்தான் கருப்பு பணத்தை பதுக்குகிறார்கள் என்று காரணம் காட்டி அதை செல்லாது என்று 2016ல் 2,000 ரூபாய் தாளை அறிமுகம் செய்தது இமாலய பிழை.
பிழையை 7 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தி கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. 2 ஆயிரம் ரூபாய் தாளில் கருப்பு பணத்தை பதுக்குவது மிக மிக சுலபம் என்றே நாங்கள் சொன்னோம். இது குதர்க்கமான முடிவு. தவறான முடிவு என்று சொன்னோம். 2,000 ரூபாய் நோட்டு மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் கையில் தான் இருக்கிறது. 500 ரூபாய் தாள்தான் புழக்கத்தில் உள்ளது.
2 ஆயிரம் ரூபாய் தாளை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று சொன்னோம். மக்கள் புறக்கணித்தார்கள். சந்தையில் யாரும் கொடுப்பதும் கிடையாது. வாங்குவதும் கிடையாது. அதன் விளைவாக வெகு விரைவிலேயே 500 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆயிரம் ரூபாய் தாளையும் மீண்டும் அறிமுகம் செய்தால் நான் வியப்படையமாட்டேன்.
செந்தில் பாலாஜியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் அண்ணாமலை மனு
இது முழுக்க, முழுக்க சிந்திக்காமல் யோசிக்காமல் செய்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக செய்த முடிவு. மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஒரு ரூபாய் நோட்டையெல்லாம் வெளியிடக்கூடாது. இப்போதாவது புத்தி வந்து 2,000 ரூபாய் தாளை விலக்கி கொண்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன். ரூபாய் நோட்டுகளை செல்லும் என்பார்கள் செல்லாது என்பார்கள் ஏனால் இப்போது நடப்பது துக்ளக் தர்பார்’ என்று தெரிவித்தார்.
செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: P Chidambaram