கோடைகாலம் அல்லது மீன்பிடி தடைகாலத்தில் கரைவலை மீனவர்களின் வலையில் மத்தி என்கிற கலர்மீன் அதிகளவு சிக்கும். இந்த மீனின் சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தற்போது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களுடைய படகுகளை கரையில் நிறுத்தி பராமரிப்பு பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் அதிக அளவில் மத்தி என்கிற கலர் மீன்கள் சிக்குகின்றன. இந்த மத்தி மீனானது பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அதிக அளவு சிக்கும்
இவ்வகை மீனானது தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு எண்ணெய் தயாரிக்கவும், வெளி மாநிலத்திற்கு உணவுக்காகவும் அனுப்பப்படுகிறது.
இந்த மீனில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கப்பல்களில் இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்தில் இவ்வகை மீன்கள் விரும்பி சாப்பிடப்படும் மீன் வகையாக இருந்து வருகிறது.
இந்த மீனில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு அந்த மீனின் சக்கையை தீவனமாக கோழிகளுக்கு அளிக்கின்றனர். இந்த மீனில் புரதச்சத்து இருப்பதால் கோழிகளும் நன்றாக வளர்கின்றனவாம்.
இந்த மத்தி மீனை கவலை, சாளை என வேறு பெயர்களாலும் அழைக்கின்றனர். மேலும் இந்த மீனை ராமேஸ்வரத்தில் பேசாளை என்றும் கூறுவர். மலையாளத்தில் மத்தி என்றும், தெலுங்கில் காவாலு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மீனின் வரத்து அதிகமாக கிடைத்தாலும் மத்தி மீன் தற்போது கிலோ ரூ.20 லிருந்து ரூ.25 மட்டுமே வியாபாரிகள் வாங்கிச் செல்வதால் போதிய விலை கிடைக்காமல் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.