ராமேஸ்வரம் ஏரகாடு பகுதியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகி மாணவ-மாணவிகள் இரண்டு வருடங்களாக பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு ஏரகாடு பகுதியில் அமைந்துள்ளது மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்லாமல் இப்பள்ளியில் மொத்தமே இரண்டு கழிப்பறைகள் மட்டும் தான் உள்ளது. எனவே இப்பள்ளி மாணவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்துவதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து ஊர்மக்கள் கூறுகையில்:-
இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றனர். ஆனால் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் முதலில் செல்லும் மாணவர்கள் மட்டும் கழிவறையை பயன்படுத்துவதாகவும், பின்னர் செல்லும் மாணவர்கள் திறந்தவெளியில், கருவேலம் மரங்கள் சுற்றியுள்ள காடுகளில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்கின்றனர்.
மேலும், 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவிகள் மட்டும் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். எட்டாம் வகுப்பு வரை யிலான மாணவர்கள் மற்றும் 1 முதல் 5 வரை படிக்கும் சின்னஞ்சிறு மாணவிகள் இயற்கை உபாதைகளுக்காக திறந்தவெளியை தேடிச் செல்லும் அவலம் உள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் இரண்டு ஆண்டுகளாக முறையிட்டும், இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உள்ளூர்மக்கள் கூறுகின்றனர்.
பள்ளியின் இரண்டு கழிப்பறைகளை சுற்றிலும் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்பட்டன. அங்கு இருக்கும் கழிப்பறையிலும் பைப்புகளிலும் தண்ணீர் சரியாக வருவதில்லை. மாணவர்களுக்கு உரிய கழிப்பறையில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதால் மாணவர்கள் அங்கு செல்லக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் பள்ளியில் ஆய்வு நடைபெற்றது.
பள்ளி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று ஊர்மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டனர். பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.