Home /ramanathapuram /

Ramanathapuram | தெருவிளக்குகள் இல்லாமல் இருட்டில் மூழ்கிருக்கும் ‘குழந்தை இயேசு’ கிராமம்- கண்டுகொள்ளாத பாம்பன் ஊராட்சி

Ramanathapuram | தெருவிளக்குகள் இல்லாமல் இருட்டில் மூழ்கிருக்கும் ‘குழந்தை இயேசு’ கிராமம்- கண்டுகொள்ளாத பாம்பன் ஊராட்சி

தெருவிளக்கு

தெருவிளக்கு இல்லா கிராமம்

பாம்பன் அடுத்த அக்காள் மடத்தில் பகுதியிலுள்ள குழந்தை இயேசு கிராம மக்கள் நீண்ட காலமாக தெருவிளக்கு இல்லாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த அக்காள் மடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குழந்தை இயேசு கிராமம். இங்கு தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருளில் மூழ்கி இருக்கும் இந்த கிராமத்திற்கு மின்விளக்குகள் அமைத்து தருமாறு கிராம மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

அக்காள்மடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் குந்துகால் அருகே அமைந்துள்ளது இந்த குழந்தை இயேசு எனும் குக்கிராமம். இக்கிராம மக்கள் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். சுமார் 50 குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் மட்டும் அமைத்துவிட்டு அதில் தெருவிளக்குகளை அமைக்காமல் விட்டுவிட்டனர். இதன் காரணமாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஊரே கும்மிருட்டாக காட்சி தருகிறது.



திருட்டு பயத்தில் கிராம மக்கள்

இக்கிராமத்தை கடந்து தான் குந்துகால் துறைமுகத்துக்கு சென்றாக வேண்டும். ஆனால் அச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த துறைமுக மின்விளக்குகளும் பராமரிப்பு இன்றி எரியாமல் பழுதாகி உள்ளது.



இவ்வாறு மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் யார் வந்து செல்கிறார்கள் என்று தெரியாத நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் வலைகள் மற்றும் டீசல் திருடு போவதாகவும் கூறுகின்றனர்.



பள்ளி, கல்லூரி சென்று விட்டு வீடு திரும்பும் அப்பகுதி மாணவர்கள் இரவில் பேருந்து வசதியும் இல்லாததால் மின்விளக்குகள் இன்றி அச்சத்துடன் 5 கிலோமீட்டர் வரையிலும் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குழந்தை இயேசு கிராமம்


பாம்பன் ஊராட்சி மன்றத்தில் இது குறித்து புகார் அளித்தால் இந்த பகுதியானது பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்டது. ஆனால் இங்கு உள்ள சிலருக்கு வாக்கானது தங்கச்சிமடம் ஊராட்சியில் இருப்பதால் அவர்களையும் பாம்பன் ஊராட்சிக்கு வாக்குகளை மாற்றிவிட வேண்டுமென்று ஊராட்சியில் கூறுவதாகவும் தெரிவித்தனர்.

எந்தவொரு அரசு நலத்திட்டங்களும் கிடைக்காமல் அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தில் வரும் அத்திபட்டி கிராமத்தை போல் ஊரில் இருந்து தனியாக இருப்பதால் எங்களுக்கு எந்தவொரு நலத்திட்டங்களும் கிடைக்கவில்லை என்று மனவேதனை அடைகின்றனர் இக்கிராமத்தினர். பாம்பன் ஊராட்சி மன்ற நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இக்கிராமத்தினருக்கு தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி