Home /ramanathapuram /

Ramanathapuram | தேவிப்பட்டினம் நவபாஷண நவகிரக திருக்கோவில் வரலாறு தெரியுமா?

Ramanathapuram | தேவிப்பட்டினம் நவபாஷண நவகிரக திருக்கோவில் வரலாறு தெரியுமா?

நவக்கிரகம்

நவக்கிரகம்

ராமநாதபுரத்தில் இருந்து வடக்கு நோக்கி 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிபட்டினம். புராண காலத்தில் தேவிபுரமாக இருந்த இக்கோவில் காலப்போக்கில் தேவிபட்டினமாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
ராமநாதபுரத்தில் இருந்து வடக்கு நோக்கி 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிப்பட்டினம். புராண காலத்தில் தேவிபுரமாக இருந்த இக்கோவில் காலப்போக்கில் தேவிபட்டினமாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

முன்ஜென்ம பாவங்கள், தர்ப்பணம், பித்ரு கடன், ஸ்தார்த்தம் போன்ற பரிகார ஸ்தலமாக தேவிப்பட்டினம் நவபாஷண நவகிரக திருக்கோவில் உள்ளது. ராமபிரானால் பூஜிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து கடலுக்குள் வைக்கப்பட்டுள்ள நவகிரகங்கள் இருக்கின்றன இதனை பற்றிய வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

தேவிபட்டினம் பெயர்க்காரணம்:

‘தேவி’ என்ற சொல் அம்பாளை குறிப்பதற்காக தேவிபட்டினம் என்ற பெயர் சூட்டப்பட்டது. தேவிபட்டினம் மற்றும் நவபாஷாணம் உருவானதை பற்றி இரண்டு புராணங்களில் விசேஷமானதாக கூறப்பட்டுள்ளது.

புராணங்களில் தேவர்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனின் கொடுமைகளை பற்றி தேவர்கள் பராசக்தியிடம் கூறினர். தேவர்களை காக்க மகிஷாசுரனுடன் போரிட பராசக்தி இங்கு வந்துள்ளார்.

பராசக்தி இங்கு வந்ததை அறிந்த மகிஷாசுரன் சக்கரதீர்த்தத்தில் ஒளிந்து கொண்டான். தனது சக்தியால் மகிஷாசுரனை வெளியில் கொண்டு வந்து வதம் செய்து கொன்று சாபவிமோசனம் வழங்கினார் பராசக்தி. தேவர்கள் அனைவரும் அமிர்தத்தை பொழிந்து அன்று முதல் தேவிபுரமாக இருந்த ஊரானது தேவிபட்டினமாக மாற்றப்பட்டது. இதையடுத்து, மகிஷாசூரன் வதம் செய்யப்பட்ட ஆயுதங்களில் இருந்த ரத்தக் கறையை சுத்தப்படுத்தி ஆயுதங்களை சாந்தப்படுத்திய தலம் தான் இந்த தேவிபட்டினம், இதன் வரலாறாக தான் லோகநாயகி அம்மன் இங்கு அமைந்துள்ளது.

நவபாஷன சக்தி பெற்ற நவகிரகங்கள்:

தேவிபட்டினம் புனித தீர்த்தமாக விளங்கும் கடலில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரகங்கள் இருக்கின்றன. இந்த நவகிரகங்களுக்கு நவபாசன சக்தி இருப்பதாக கூறுகின்றனர்.

ராமருக்கு சனி தோஷம் நீங்கிய இடம்:

ராம அவதாரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ள வெயில் உகந்த விநாயகர் ஆலயத்தை தரிசனம் செய்து விட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆதிசேது என்கிற இடத்தில் நன்கு ஜாதகத்தில் கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக இருக்க வேண்டும் என்பதால் நவகிரகங்களை பூஜை செய்த இடமாகும்.

இந்த நவகிரகங்களால் ராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியதாகவும், ராமபிரான் நவகிரகங்களை பூஜை செய்து திலதானம் செய்வதற்காக அங்குள்ள புரோகிதர்களை ராமபிரான் தேடிய போது ஒரு புரோகிதர்கள் கூட அங்கு இல்லாதபோது சிவன் மற்றும் பார்வதி தேவி காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் நினைவாக அமைந்தது தான் திலகேஸ்வரர் ஆலயம். பின்பு ராவணனுடன் போரிட்டு போரில் வென்றதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சக்கர தீர்த்தம்:

இங்குள்ள சக்கரதீர்த்தத்தில் தர்ம தீர்த்தம், காலவதீர்த்தம், அமிர்த தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தமும் விசேஷமான தீர்த்தம் ஆகும். மகிஷாசுரனை வதம் செய்து ஆயுதங்களை கழுவியதால் இந்த சக்கர தீர்த்தம் மிகவும் முக்கிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

நவகிரகங்கள் சிறப்புகள் :

நவகிரகங்கள் 2,000 வருடத்திற்கு மேலாக கடலில் இருந்தாலும் அன்று முதல் இன்று வரை நவகிரகங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. பக்தர்கள் இங்குள்ள நவகிரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம். இதனால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டு அன்னதானம் வழங்கினால் பிரம்மஹத்தி தோஷம் மற்றும் பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

விஷேச நாட்கள்:

முற்பிறவி பாவங்கள், பித்ரு சாபம் நீங்க பக்தர்கள் அதிகளவில் இங்கு வருகை புரிகின்றனர். அமாவாசை நாட்களில் இங்கு அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் சென்று விட்டு இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகளவில் வருகை புரிகின்றனர். இந்த நவபாஷான நவகிரகமானது அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டு மாலை 7 மணி வரையிலும் திறந்திருக்கும், அதிகாலை 8 மணிக்கு செய்தால் மிகவும் நல்லது என்று கூறுகின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி