மீன்பிடி தடை காலத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வரும் இந்த வேளையில் மீன்பிடி விசை படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் கடல் வளத்தை கெடுக்கும் அதிக திறன் கொண்ட குதிரை இன்ஜின்களை பயன்படுத்தினால் விசைப்படகு உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது. வழக்கம்போல் இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி தடைகாலம் துவங்கி இன்னும் சில தினங்களில் தடை காலம் முடிந்து மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளின் நிலை குறித்து, ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். இந்த ஆய்வில் விசைப்படகுகளின் நீளம், அகலம், இயந்திரத்தின் குதிரைத் திறன் மற்றும் படகின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வுப் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நாட்களில் நடைபெறும்.
இந்நிலையில், ராமநாதபுரம் மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர் காத்தவராயன் மேற்பார்வையில், ராமநாதபுரம் வடக்கு மற்றும் தெற்கு என ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை நேற்றும் இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 1600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் போது விசைப்படகுகளின் நீளம் மற்றும் அகலம் அளவிடப்பட்டது. அதே போல் மீன் பிடிக்க செல்லும் விசைப்படகின் தரம் குறித்து முழுமையாக அதிகாரிகளால் ஆய்வு செய்தனர்.
மீன் பிடிக்க தகுதியற்ற மராமத்து பணி செய்யாமல் மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளின் மீன் பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்டுத்தும் விசைப்படகுகள், ஆழ்கடல் மீன்பிடிப்பிறக்கு பயன்படுத்தும் ஸ்டீல் விசைபடகுகள் மற்றும் அதிக குதிரை திரன் கொண்ட இன்ஜின்கள் பொருத்திய படகுகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழிக்கும் விசைபடகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத்தறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.