ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய 160 அடி உயரம் கொண்ட கலங்கரை விளக்கத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலங்கரை விளக்கத்தின் மேல் வரை சென்று தனுஷ்கோடியின் அழகை ரசித்து பார்த்து செல்கின்றனர்.
தனுஷ்கோடி பழைய ரயில் நிலையத்திற்கு அருகே, ரூ.7.09 கோடி செலவில் கலங்கரை விளக்கம் கட்டுவதற்கு, கடந்த 18.02.2020 அன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.
160 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில், கடலை கண்காணிக்கும் வகையிலும், பேரிடர் காலங்களில் மீனவர்களை பாதுகாத்திடும் வகையிலும் நவீன ரேடார் கருவியும், கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் வகையில் இந்த கலங்கரை விளக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எண்கோண வடிவில் அமையவுள்ள கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் சென்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம், அரிச்சல்முனை உட்பட கடல் சூழ்ந்த பசுமையான தீவின் அழகை பார்க்கும் வகையில் பார்வையாளர்கள், மேல் மாடத்திற்கு செல்ல லிப்ட் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. (எண்கோணம் என்பது ஒரு சம பரப்பில் எட்டு கோணங்களைக் கொண்ட முற்றுப்பெறும் ஒரு வடிவம்.)
தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மும்பையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறக்கப்பட்டது.
தனுஷ்கோடி பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் 229 படிகளில் மூலம் கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு சென்று தனுஷ்கோடி கடல் மற்றும் இயற்கை அழகையும் பார்த்து ரசித்தனர்.
மேலும் லிஃப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதன் பணிகள் அடுத்த மாதம் முடியும் நிலையில் திறக்கப்படுகிறது இதில் செல்ல நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.