தமிழக அரசின் தடையை மீறி ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளிடம் வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்ளால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலம் என்பதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து ராமநாதசுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள தனுஷ்கோடி, ராமர் பாதம் உள்ளிட்ட பல சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது,
இந்நிலையில், சமீபகாலமாக சுற்றுலா பயணிகள் தீவு முழுவதும் சுற்றிப்பார்க்க இருசக்கர வாகனம் வாடகைக்கு கிடைக்கும் என்று அனைத்து இடங்களிலும் பெரிய பேனர்கள் வைத்து விளம்பரம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரு சிலரால் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விட கூடாது என்று தடை விதித்த போதும் இந்த தடையை மீறி ராமேஸ்வரத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சுமார் 800க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளனர். அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்காத படித்த இளைஞர்கள் இந்த தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக சுற்றுலா முடங்கிய நிலையில் ஆட்டோ வாடகை மாதத் தவணை மற்றும் வரி போன்றவைகள் கட்ட முடியாமல் திணறி தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகையால் ஆட்டோ ஓட்டுனரின் வாழ்வாதாரம் தற்போது தான் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் தற்போது அரசு தடையை மீறி இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுவதால் மீண்டும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் முடங்கி விட்டது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் காவல் உதவி கண்காணிப்பாளரிடம் ராமேஸ்வரம் ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இனியாவது, அனுமதி இன்றி செயல்படும் இருசக்கர வாகனம் வாடகை ஓட்டுவதை தடுத்து நிறுத்தி 800 ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்கிறனர் ஆட்டோ ஓட்டுனர்கள்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.