ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே சே.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள கழுநீர் பாலமுருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதை கண்டு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கல்வெட்டை படியெடுத்து படித்து ஆய்வு செய்தார். இந்த கல்வெட்டானது சே.கொடிக்குளம் கிராமத்தில் அன்னதானத்திற்கு சேதுபதி மன்னர் ஒரு ஊரை தானமாக வழங்கியதை தெரிவிக்கும் 350 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு என்று தொல்லியல் ஆய்வு நிறுவனத்தலைவர் ராஜகுரு கூறினார்.
கல்வெட்டு பற்றி கூறிய ராஜகுரு, “இந்த கல்வெட்டானது நான்கரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உள்ள ஒரு கடற்கரைப் பாறை கல் தூணாகும். இரண்டு பக்கத்தில் கல்வெட்டும், ஒரு பக்கத்தில் செங்கோல், சூரியன், சந்திரனும் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என தொடங்கி ‘போவாராகவும்’ என கல்வெட்டு முடிகிறது. ரகுநாத திருமலை சேதுபதி காத்த தேவருக்கும், ஆதினா ராயன் தேவருக்கும் புண்ணியமாக அன்னதான பற்றுக்கு சே.கொடிக்குளம் என்ற ஊர் சர்வ மானியமாக கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு 1594 சொல்லப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1672 ஆகும்.
கி.பி 1646 முதல் 1676 வரை சேதுநாட்டை ஆண்ட ரகுநாத திருமலை சேதுபதி தனக்கும், ஆதினாராயன் தேவருக்கும் புண்ணியமாக தன் பெயரில் உருவாக்கிய ரகுநாத தேவர் அன்னதான பற்றுக்கு கொடிக்குளம் என்ற ஊரை தானமாக வழங்கியுள்ளார். இங்கு மன்னர் ஒரு ஊரையே தானமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வெட்டு மொத்தம் 26 வரிகள் கொண்டது. முதல் பக்கத்தில் வரும் எழுத்துக்கள் தொடர்ச்சியாகவும், அடுத்த பக்கத்தில் வரும் கல்வெட்டு எழுத்துகள் அழிந்த நிலையில் உள்ளதால் சில சொற்களை கண்டறிய இயலவில்லை என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து வருகை தருபவர்களுக்கு உணவு, நீர், தங்கும் இடம் வழங்க 5 மைல் தூரத்திற்கு ஒன்று என்ற அளவில் மடங்கள், சத்திரங்களை சேதுபதி மன்னர்கள் உருவாக்கினர். இதில் முதன்முதலில் அன்னதானச் சத்திரங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியவர் ரகுநாத திருமலை சேதுபதி ஆவார். ரகுநாத திருமலை மன்னரால் இவ்வூரில் கட்டப்பட்ட அன்னதான மடம் கோயிலின் தெற்கு பகுதியில் இருந்து அழிந்தது. 10 அடி நீளமுள்ள சிறிய சுவர் தற்போதும் இங்கு உள்ளது. இக்கோயிலில் சங்க இலக்கியங்களில் பாலை திணைக்குரியதாக சொல்லப்படும் மருத்துவ குணமுள்ள உகாய் மரம் வளர்ந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram