புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சானாவயல் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டில் சோழர்கள் ஆட்சியை, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முடிவுக்கு கொண்டு வந்தார் என்ற தகவல் இருப்பதாக ஆய்வாளர் மணிகண்டன் தெரிவிக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள, சிவகங்கை மாவட்டம், சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலை அடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ. மணிகண்டன் தலைமையிலான குழுவினர் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் ஆறாம் ஆட்சியாண்டு கல்வெட்டினை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கல்வெட்டு குறித்து ஆய்வாளர் மணிகண்டன் கூறுகையில் , ”புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள சானாவயல் பெருமாள் மேட்டில், உடைந்த பலகை கல்வெட்டு நான்கரை அடி உயரத்துடன், ஒன்றே முக்கால் அடி அகலத்துடன், மூன்று புறங்களிலும் 114 வரிகளுடன் உள்ளது, இவற்றில் 103 வரிகள் தெளிவாக உள்ளது ,
கல்வெட்டின் இறுதிப்பகுதி முழுவதும் சிதைந்த நிலையில் ஸ்ரீ மாஹேஸ்வரர் ரக்ஷை என்று முற்றுப் பெற்றுள்ளது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் செம்பொன்மாரியில் சோழரை (பொ. ஆ. 1219) மூன்றாவது ஆட்சியாண்டில் வென்றதாக இலங்கை வரலாறு கூறுகிறது.
இவ்வரலாற்று தகவலுக்கு இக்கல்வெட்டு வலு சேர்க்கிறது. சோழர்கள் ஆட்சியை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முடிவுக்கு கொண்டு வந்தார் என்ற தகவல் இந்த கல்வெட்டில் இருக்கிறது. இது போன்ற மிக முக்கிய வரலாற்று தகவல்களை கொண்டுள்ள இக்கல்வெட்டு வரலாற்று ஆய்வுகளுக்கு சான்றாக இருக்கும் என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukottai