Home /pudukkottai /

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகமாக செயல்படும் 100 ஏக்கர் தொண்டைமான் அரண்மனை- சிறப்புகள் என்ன?

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகமாக செயல்படும் 100 ஏக்கர் தொண்டைமான் அரண்மனை- சிறப்புகள் என்ன?

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன்னர் தொண்டைமான் அரண்மனையில் செயல்பட்டுவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
தமிழகத்தில் எங்கும் இல்லாத சிறப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்படும் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் அரண்மனை, நூறு ஏக்கர் நிலப்பரப்பில் நகரின் நடுவில் வனத்திற்கு மத்தியில் பசுமையாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்றுச் சிறப்புகளுக்கு குறைவில்லாத மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகும் சிலகாலம் தனி சமஸ்தானமாக செயல்பட்ட பெருமைக்குரியது புதுக்கோட்டை. இப்படி பல வரலாற்றுச் சிறப்புகளை கொண்ட புதுக்கோட்டையின் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், மன்னர்கள் ஆட்சி செய்த அரண்மனை தான் தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இயங்கி வருகிறது. 99 ஏக்கர் நிலப்பரப்பில் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம் இருக்கும் நிலையில் அந்த நிலப்பரப்பு முழுமையும் மன்னர் காலத்தில் எழுப்பிய சுற்றுச்சுவரோடு இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

அலுவலகத்தின் அறிவிப்பு பலகை


ஆட்சியரக நுழைவு வாயிலில், மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை எனவும் அதன் கீழ் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனவும் பெயர்பலகை அமைந்திருக்கிறது. மன்னர் காலத்தில் எழுப்பப்பட்ட நுழைவு வாயில் நம்மை கம்பீரத்தோடு வரவேற்கிறது.

ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதி


99 ஏக்கரில் 80 சதவீதத்திற்கும் மேலாக வனம் சூழ்ந்த பகுதியின் மையத்தில் அமைந்திருக்கிறது மன்னர் இராஜகோபால தொண்டைமான் கருங்கற்களால் கட்டிய அரண்மனை. அந்த அரண்மனையில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போது அலுவலகத்தின் முன்னர் மன்னர் ராஜகோபால தொண்டைமானிற்கு வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலகம்


1930ல் ராஜகோபால தொண்டைமானால் நிறுவி முடிக்கப்பட்ட அரண்மனை, 1974 ல் புதுக்கோட்டை தனி மாவட்டமான போது, அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் அரசுக்கு விலைக்கு வாங்கப்பட்டு, அன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செம்மையோடு செயல்பட்டு வருகிறது.

ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவிப்பு பலகை


மேலும் இந்த மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி அலுவலகம், பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், சமுக நலத்துறை அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம், நில அளவைத்துறை அலுவலகம், கனிம வளத்துறை அலுவலகம், மாவட்ட தொழில் மையம், கலால் துறை ஆகிய அலுவலங்கள் அமைந்துள்ளன.

கூட்ட அரங்குகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன.
இன்றும் மாவட்ட ஆட்சியரக கட்டிடத்தில் மன்னர் காலத்தில் இருந்தாற் போன்ற சிவப்பு கம்பளங்கள் தான் விரிக்கப்பட்டு உள்ளன. இதுவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன.

வரலாற்று சிறப்பு மிக்க புதுக்கோட்டையின் வரலாற்று தொண்மையை பறைசாற்றும் விதமாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது மாவட்ட ஆட்சியரகமாக மாறிப் போன புதுக்கோட்டை இராஜகோபால தொண்டைமானின் மாளிகை.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி