Home /pudukkottai /

வரலாறு, கலை இரண்டையும் சுமந்து நிற்கும் புதுக்கோட்டை குடுமியான் மலைக்கோவில்- இத்தனை சிறப்புகளா?

வரலாறு, கலை இரண்டையும் சுமந்து நிற்கும் புதுக்கோட்டை குடுமியான் மலைக்கோவில்- இத்தனை சிறப்புகளா?

குடுமியான் மலைக்கோவில்

குடுமியான் மலைக்கோவில்

இசைக் கல்வெட்டுகள் உட்பட புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையைச் சுற்றி உள்ள ஏராளமான சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைத்து வியப்பில் ஆழ்த்துகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Annavasal, India
  புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை. இங்கே பழந்தமிழர்களின் வரலாறு மற்றும் கலைகள் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோவில்கள் உள்ளன. மலை குன்றின் மீது சிக்கநாதீஸ்வரன் மூலவராக கொண்ட சிவபெருமான் கோவில் ஒன்றுள்ளது. அதனை சுற்றி நான்கு சிறு கோவில்களும் அவற்றில் சிற்பங்களும் காண்பவா் கண்ணுக்கு விருந்தாகவும் தகலை பெற விரும்புபவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும் இருந்து வருகிறது.

  இங்கு அமைந்துள்ள குகைக் கோவிலின் முகப்பில் கா்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் சொல்லும் இசை கல்வெட்டு ஒன்றும் 100-க்கு மேற்பட்ட கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. குடுமியான்மலை முழுவதும் மொத்தமாக 120 கல்வெட்டுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

  வரலாற்றைத் தாங்கி நிற்கும் க்ல்வெட்டுகள்


  குடுமியான் மலைக் குன்றைச் சுற்றிதான் ஊர் அமைந்திருக்கிறது. குன்றின் அடிவாரத்தில் உள்ள சிகாநாதசாமி கோவில் முழுவதும் அமைந்துள்ள தத்ரூபமான, நுட்பமான வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்கள் வியப்பளிக்கின்றன. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில் காணப்படுகிறது. மலைக்கு மேற்பகுதிக்குச் செல்லும் வழியில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன.

  கோவில் சிற்பங்கள்


  அடிவாரத்தின் கிழக்குப் பகுதியிலும், அதன் அருகிலும், குன்றின் மேல் பகுதியிலும் என அங்கே நான்கு கோவில்கள் காட்சியளிக்கின்றன. மலையின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிகாநாதசாமி கோயிலின் ராஜ கோபுரத்தை அடுத்து உள்ளே நுழைந்தால் ஆயிரங்கால் மண்டபத்தைக் கண்டு ரசிக்கலாம். இந்த மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.

  அடுத்துள்ள வசந்த மண்டபத்திற்குள் நுழைந்தால், மெய் சிலிர்க்கும் உணர்வு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்க பல சிற்பங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மன்மதன், ரதி, மோகினி உருவில் விஷ்ணு, விநாயகர், 12 கைகளும் 6 முகங்களும் கொண்ட முருகன், பத்துத் தலை ராவணன், கருடன் மீது அமர்ந்து பயணம் செய்யும் விஷ்ணு போன்ற ஏராளமான சிறபங்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.

  இங்குள்ள சிவபெருமான் சிகாபுரீஸ்வரன் அல்லது குடுமி நாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். கர்ப்பக் கிரகத்தில் லிங்க வடிவம் இருக்கிறது. பெயருக்கு ஏற்ப லிங்கத்திலும் குடுமி இருப்பது போன்ற அமைப்பு காணப்படுவது இதன் தனிச்சிறப்பு. கோவில் பிரகாரத்தில் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னதி அருகில் ஒரு முகத்துடன் கூடிய இரு உடல் அமைப்பில் வடிக்கப்பட்டுள்ள சிற்பம் வியக்க வைக்கும். இங்குள்ள அம்பாள் தனி சன்னதியில் அகிலாண்டேஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார். கோவிலின் பின் பகுதியில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் உள்ளது.

  மூலஸ்தானத்தில் சிவபெருமான் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கிறார். இங்கிருக்கும் இரண்டு துவார பாலகர்கள் சிற்பங்கள் சிரித்த வண்ணம் காட்சியளிக்கின்றனர். துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருப்பது போன்ற சிற்பம் வேறு எங்கும் காணப்படுவதில்லை. குகைக் கோயிலின் தென் பகுதியில்தான், கர்நாடக சங்கீத இலக்கணம் குறித்த புகழ் வாய்ந்த கல்வெட்டு இருக்கிறது. வண்ண ஓவியங்களும் ஆங்காங்கே காட்சியளிக்கின்றன.

  குடுமியான் மலையில் இசையைப் பற்றியும் அதன் அடிப்படை ராகங்களைப் பற்றியும், ஏழு ராகங்களுக்கு உரிய விதிகளைப் பற்றியும் பாலி கிரந்த எழுத்தில் அவை அழகாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டுள்ளன. கா்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் சொல்லும் புகழ் வாய்ந்த இசைக் கல்வெட்டு இந்தியாவிலேயே குடுமியான்மலையில் மட்டும்தான் இருக்கிறது. இந்த கல்வெட்டின் பெருமையைக் கேள்விப்பட்டு வெளிநாட்டு இசை மேதைகள் பலரும் நேரடியாக வந்து ஆய்வு செய்துள்ளனர். வரலாற்று படைப்புகளை தேடிப் பயணிப்பவர்களுக்கு குடுமியான்மலை அளவற்ற வியப்பை தரும் என்பது உறுதி.
  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Pudukkottai

  அடுத்த செய்தி