புதுக்கோட்டை மாவட்டத்தில் ராம கவுண்டம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் எலுமிச்சை சாகுபடி பெருவாரியாக நடைபெற்று வருகிறது. கன்றுகள் நடவு செய்த பின்னர் சரியான பராமரிப்பு மட்டுமே தேவை என்பதால் இந்த விவசாயத்தில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 15 ஆண்டுகளாக எலுமிச்சை சாகுபடி செய்து அசத்தி வரும் விவசாயி பொன்னுச்சாமி எலுமிச்சை விவசாயத்தின் ரகசியங்களை நம்மிடம் பகிர்ந்தார்.
அவர் பேசுகையில், “நான் ITI முடித்துள்ளேன். பல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருந்தாலும் யாரிடமும் கையேந்தி நிற்க எனக்கு மனம் வரவில்லை. ஆனாலும் பணத்தேவைக்கு இந்த விவசாய தொழில் தான் எனக்கு கை கொடுத்து வருகிறது. இதில் வருகிற வருமானத்தில் தான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன்.
எலுமிச்சையின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனோஷியா. இது உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திர, மத்திய பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், டெல்லி, ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
எலுமிச்சை குளிர்ச்சி தரும் கனியாகும். இது உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுகிறது. மா, வாழை ஆகியவற்றிக்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான். டிசம்பர் – பிப்ரவரி ஜூன் செப்டம்பர் நடவுக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.
இதையும் படிங்க : உத்தமர் காந்தி விருது... புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் பி.கே.எம். -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், பிரமாலினி ராஸ்ராஜ், வி.ஆர்.எம் 1 ஆகிய இரங்கள் தான். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களிலும் களிமண் இல்லாமல் மணல் பாங்கான நிலங்களிலும் எலுமிச்சை செழிப்பாக வளரும்.
நிலத்தை நன்கு உழுது சமன்படுத்தி கொள்ள வேண்டும் அதில் 20 அடி இடைவெளியில் 3 அடி ஆழம் மற்றும் 3 அடி அகலம் இருக்கும்படி குழிகள் எடுக்க வேண்டும் . ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிரப்பி, ஒரு வாரம் ஆற போட வேண்டும்.
பதியன் செடிகளை தான் நடவு செய்ய வேண்டும் ஒரு ஏக்கருக்கு 1௦௦ பதியன் செடிகள் தேவைப்படும். 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க ஒவ்வொரு செடியின் அருகில் ஒரு நீளமான குச்சியை ஊன்றி அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.
நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட வேண்டும், அதற்கு பிறகு, மண்ணின் ஈர தன்மையை பொறுத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது. எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு ஆதி இடைவெளி விட்டு அரையடி விட்டதில் வட்டப்பாத்தி எடுத்து 2 கிலோ ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், சிறிதளவு வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
1 வருடத்திற்கு பின்னர் டிரைக்கோடெர்மா விரிடின், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பெரிபியா குப்பைகள், வேப்பம் புண்ணாக்கு போன்றவை கலந்து செடிகளின் அடி பகுதியில் இட வேண்டும்.இவ்வாறு செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
களையின் வளர்ச்சியை பார்த்து களை எடுக்க வேண்டும்.நட்ட மூன்றாவது ஆண்டிலிருந்து காய்கள் அறுவடைக்கு வந்து விடும். திரண்ட கரும்பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும். தொடர்ந்து சரியான பராமரிப்பில் ஈடுபட்டு வந்தால் 3 வருடத்தில் நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பித்து விடும்.
இரண்டு ஏக்கருக்கு மாதம் 15,000 முதல் 20000 வரை கிடைக்கும்” மேலும் இந்த எலுமிச்சை தோட்டத்தில் உள்ளே தேக்கு, அத்தி மரம், கொய்யா போன்ற மரங்களையும் வளர்த்துக் கொண்டால் அதன் மூலமாகவும் இரட்டை வருவாய் பெறலாம்” என்கிறார் விவசாயி பொன்னுச்சாமி.
செய்தியாளர் : சினேகா - புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Pudukkottai