Home /pudukkottai /

புதுக்கோட்டை சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்- அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பு

புதுக்கோட்டை சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்- அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பு

புதுக்கோட்டை சித்தன்னவாசல்

புதுக்கோட்டை சித்தன்னவாசல்

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து ரசித்து சென்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை ஓவியங்கள், சமணர் படுக்கைகள் உள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சித்தன்னவாசல் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

அதன் அருகே தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வரும் படகு சவாரி செய்வதற்கான படகு குழாம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை உள்ளன. மரங்கள் நிறைந்த, ரம்மியமான சூழலில் உள்ள இச்சுற்றுலாத் தலத்துக்கு நேற்றுமுன் தினத்தில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர்.

இன்று ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்ததால் சுற்றுலாத்தலம் திருவிழாபோல் காட்சி அளித்தது. சென்னையில் இருந்து காவல் துறை அதிகாரிகளும் சுற்றுலாத்தலத்தைப் பார்வையிட்டனர். வரலாற்று சிறப்புகளை பார்வையிட்டதோடு, படகு சவாரி செய்தும், சிறுவர்கள் பூங்காவில் உற்சாகமாக விளையாடியும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம்


தொலைதூரத்தில் இருந்து ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இச்சுற்றுலா தலத்தில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. மேலும், சிற்றுண்டி செயல்படாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புகளை விளக்கும் வகையில் சுவரைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து ஏராளமான சிறு கல் பூங்காவை திறக்காததாலும், இசை நீரூற்று செயல்படாததும் அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்கிறது.

சித்தன்னவாசல் மலைக்கோவில்


இது குறித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமாரவேல் கூறியபோது, “குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் இருசக்கர வாகனத்துக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.40, நபருக்கு ரூ.10 வீதம் நுழைவுக் கட்டணத்தை தமிழக அரசு வசூலிப்பது கண்டனத்துக்கு உரியது. எனவே, சுற்றுலாத் தலத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சிறுவர் பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு கருவிகளை சீரமைப்பதோடு, புதர்களை அகற்ற வேண்டும் என்றார்.

புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த சித்தன்னவாசலிற்கு விடுமுறை நாட்களில் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதும், புறநகர் பேருந்துகளை சித்தன்னவாசல் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல உத்தரவிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

செய்தியாளர்: துர்கா மாரியப்பன், புதுக்கோட்டை.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி