புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள துவரடிமனைப் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.
களிமண்ணை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் சிலைகள் என்பதால் இந்த சிலைகளுக்கு கூடுதல் மவுசு இருந்து வருகிறது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட சிலைகள் விற்று தீர்ந்துள்ளன.
முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தற்போது சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சிலைகள் விற்பனை ஆகாமல் இருந்ததாகவும், தற்போதும் பழைய அளவில் சிலைகள் விற்கப்படவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர் சிலை வடிவமைப்பாளர்கள்.
இரண்டு அடி சிலைகள் முதல் 12 அடி சிலைகள் வரை துவரடிமனையில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்டு தோறும் விநாயகர் சிலைகளை வடிவமைப்பதையே பணியாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் இந்த கலைக்கூடத்தின் சிலை வடிவமைப்பாளர்கள்.
கடைகளில் வைத்து விற்பனை செய்ய சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை செய்து வந்தாலும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஊரில் வைத்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும் சிலைகளைத்தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
துவரடிமனையில் புலியின் மீது அமர்ந்த விநாயகர், காளையின் மீது அமர்ந்துள்ள விநாயகர் என விதவிதமான சிலைகள் தயாராகி வருகின்றன.
இதுகுறித்து கலைக்கூட உரிமையாளர் சங்கர் கூறியதாவது, துவரடிமனையில் தயாரிக்கப்படும் சிலையின் மீது பூசப்படும் பெயிண்டைத் தவிர்த்து எந்த பொருளிலும் இராசயணக் கலப்பு இல்லாமல் இருப்பதாகவும், முழுக்க முழுக்க களிமண்ணால் மட்டுமே தயாரிக்கப்படுவதாலும் நீர்நிலைகளையும், நீர்வாழ் உயிர்களையும், பொதுமக்களையும் எந்த வகையிலும் பாதிக்காத சிலைகளாக உருவாகின்றன. இதனால் பொதுமக்கள் துவரடிமனை சிலைகளை விருப்பத்துடன் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
மேலும், சிலைகளுக்குள்ளாகவே வேம்பு உள்ளிட்ட பல்வேறு விதைகளை வைத்து தயாரிப்பதாவும், இதனால் சிலைகளை கரைத்த பின்னர் அந்த விதைகள் கரை ஒதுங்கி மரமாக மாறக் கூடிய வகையில் வடிவமைப்பதாகவும், அனைத்து விதைகளும் வளராவிட்டாலும் ஒரு மரமாவது அதன் மூலம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், முழுக்க முழுக்க இயற்கையான விநாயகர் சிலைகளை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கும் சங்கரின் சிலைகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிக மவுசு இருக்கிறது.
300 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையிலான சிலைகள் சங்கரின் கலைக்கூடத்தில் தயாரிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே பதிவு செய்து எந்த விலையில் வேண்டுமானாலும் சிலையை வடிவமைத்து பெற்றுக் கொள்ள முடியும்.
செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai