Home /pudukkottai /

திருமணத் தடைகளை போக்கும் சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோவில்- தனிச் சிறப்புகள் தெரியுமா?

திருமணத் தடைகளை போக்கும் சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோவில்- தனிச் சிறப்புகள் தெரியுமா?

புதுக்கோட்டை பரிமளேஸ்வரர் கோவில்

புதுக்கோட்டை பரிமளேஸ்வரர் கோவில்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலில் வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் திருமணஞ்சேரி கிராமம் உள்ளது. முற்காலத்தில் இவ்வூர் ‘கோவில் காடு‘ என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. பின்பு அங்கு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் தோன்றிய பிறகு திருமணஞ்சேரி என்று பெயர் பெற்று இருக்கிறது.

    அக்காலத்தில்தான் திருமணநாதர் என்ற பெயரும் பரிமளேஸ்வரர் பிரகன்நாயகி என்று மருவி இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதில் மணம் என்பது ஆணும் பெண்ணும் இணையும் திருமணத்தை ஒரு பொருளாகவும், வாசனையை ஒரு பொருளாகவும் குறிக்கும்.
    பரிமளேஸ்வரர் என்ற சமஸ்கிருத வார்த்தை வாசனை என்ற அடிப்படையில் பொருள் தருகிறது.

    பரிமளேஸ்வரர் கோவில் கொடிமரம்


    திருமணஞ்சேரி ஊரின் வடகிழக்கில் கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கீரனூர் குளத்தில் இருந்து உருவாகும் சிறு ஓடையாக வடிவம் எடுத்து பிறகு அக்னியாறு எனும் பெயரில் காட்டாறாக ஓடிவந்து வங்கக்கடலில் கலக்கிறது. வடக்கிலிருந்து தெற்காக ஓடும் இந்த ஆறு நெய்வேலி எனும் கிராமத்திற்கும் திருமணஞ்சேரி கிராமத்திற்கும் இடையில் ஓடுகிறது.



    இக்கோயிலில் எழுப்பும் சங்கு ஒலி கேட்கும் தூரத்திற்குள் உயிர்களை விஷம் தீண்டினால் விஷம் ஏறாது என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது. அது போலவே இன்றும் இக்கிராமத்தின் எல்லைக்குள் இருப்பவர்களுக்கு விஷ சந்துகள் தீண்டினால் இத்திருத்தலத்தில் எதிரே உள்ள குளத்தில் சென்று கைகள் இரண்டையும் சேர்த்து நீவிவிட்டு மூன்று முறை நீரை நம்பிக்கையுடன் உட்கொண்டால் விஷம் நீங்கி நல்லபடியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

    பரிமளேஸ்வரர் தெப்பக்குளம்


    இத்திருத்தலத்தின் தல வரலாற்றில் விஷம் தீண்டிய ஆண் மகனை வயோதிகர் உருவில் வந்து இறைவன் இக்குளத்து நீரை கொடுத்துதான் உயிர்ப்பித்ததாக இருப்பதால் இக்குளத்து நீருக்கு விஷம் முறிக்கும் தன்மை உள்ளதாகச் செவிவழிச் செய்திகளாக கடத்தப்பட்டு வந்திருக்கின்றன.

    பரிமளேஸ்வரர் கோவிலில் வழிபடும் பக்தர்கள்


    இத்திருத்தலத்தின் சங்கு ஒலி கேட்கும் தூரத்திற்குள் கிணறு தோண்டினால் இடித்து விழுந்து விடும் எனக் கூறப்படுகிறது. இதற்குரிய காரணமாக கிணறு சாட்சி சொல்ல மதுரை சென்றதாக கூறுகின்றனர்.

    அதுபோலவே இவ்வூரைச் சுற்றி நிலையான கிணறு ஏதுமில்லை. 3 வாரத்திற்கு இத்தலத்திற்கு வந்து திருமண நாதரையும் பெரியநாயகி அம்பாளையும் தரிசித்து மனக்குறையைக் கூறி திருமணத்தடையை நீக்கி கொள்வதும் உடனே வரன் அமைவதும் இக்கோயிலில் கண்கூடாக நடக்கின்றது.

    கல்வெட்டுச் செய்திகள்

    திருமணஞ்சேரி கோயிலில் 11 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுச் செய்திகளைக் கொண்டு இக்கோயிலுக்கு மன்னர்களும் மக்களும் அளித்த நன்கொடைகளையும் திருப்பணி பற்றிய செய்திகளையும் தெரிந்து கொள்ளமுடிகிறது.

    திருமணஞ்சேரி கோயில் பசுமையான வயல்களுக்கிடையே முன்னேயும் பின்னேயும் குளங்கள் அமையப் பெற்று குளங்களின் கரைகளில் நிழல் தரும் சுகந்த காற்று தரும் அரச மரம், வேம்பு மரம், தென்னை மரங்கள் சூழ்ந்து இயற்கை அழகுடன் கிழக்கு நோக்கி உள்ளது. கோயில் முகப்பில் கிழக்குப் பகுதியில் திருக்குளம் ஒன்று உள்ளது. திருக்குளத்தின் படிக்கட்டுகளின் மேற்பரப்பில் படித்துறை வலம்புரி விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.

    கோயிலின் நேர் எதிரே உள்ளது கோயில் திருக்குளம். இக்கோயிலின் கடவுளர்களுக்கு இந்நீரே பூசைக்குப் பயன்படுத்தப்படுகிறது. கோயிலின் வடக்குப் பகுதியிலுள்ளது சம்புப் பள்ளம் எனப்படும் குளம். இது இப்போது தூர்ந்த நிலையில் காணப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுவினரால் இக்குளத்தின் தெற்குப் பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. கோயில் குளத்தையடுத்து தெற்குப் பகுதியில் மஞ்சள் குண்டு என்ற குளம் காணப்படுகிறது.

    முள்ளங்குறிச்சி சாலைப் பிரிவின் அருகே காசாடிப் பள்ளம் என்ற குளம் உள்ளது. இது திருமணமானவுடன் கணவனும் மனைவியும் காசு போட்டு எடுக்கும் குளமாகும். இது இப்பொழுது தூர்த்து வயலாக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் ஆலய தரிசனம் செய்வோர் நீராடி தூய உடை அணிந்து திருநீரு உருட்திராட்சம் போன்றவை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் தேங்காய், மலர்கள், சாம்பிராணி, ஊதுபத்தி, சூடம் முதலிய வழிபாட்டுப் பொருள்களைக் கொண்டு செல்லலாம்.

    அந்தந்த நேரத்திற்கு படையலுக்கும் ஏற்பாடு செய்து அந்த பிரசாதத்தை ஏழை எளியோர்க்கு வழங்கச் செய்தால் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“ (மணிமேகலை) என்ற பெறும் போற்றிற்குரியவராவர்.

    முதலில் ஆலய கோபுரத்தை வணங்க வேண்டும். உள்ளே சென்று கொடி மரத்தின் முன்னே ஆண்கள் தலை மோவாய் இரு கைகள் இரு புஜங்கள் முழங்காலிரண்டு ஆகிய ஒட்டு உறுப்புகளும் நிலத்தில்படுமாறு அஷ்டாங்க வழிபாடு செய்ய வேண்டும். கொடி மரத்தின் எதிரில் வணங்கிய பின் நந்திதேவரிடம் விடை பெற வேண்டும். அதிலும் நந்தி தேவரிடம் மானசீகமாய் விடை பெற வேண்டும்.

    நந்தி தேவரிடம் விடை பெற்ற பின்பு விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை 5 முறையும் வலம் வந்து வணங்க வேண்டும். பின்பு சமயாச்சாரியார்களை வணங்கிவிட்டு மும்முறை கைகளால் தாளமிட்டு சிவதரிசன பலனைத் தந்தருளும்படி வேண்டுதல் அவசியமாகும். பிறகு கொடி மரத்தின் அருகில் வடக்கு முகமாக அமர்ந்து சிவாயநம திருவைந்தெழுத்தை 108 முறை தியானித்தல் அவசியமாகும்.

    இக்கோவிலின் ஆடித் திருவிழா இத்திருக்கோயிலின் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி 18ம் பெருக்கு அன்று புதுமணத் தம்பதிகள் ஆயிரக்கணக்கில் வந்து தாலி பெருக்கிக் கட்டிக் கொண்டு இறைவனை வழிபட்டுச் சிறப்பாக ஆடி 18ம் விழாவைக் கொண்டாடி சுவாமி அம்பாளின் அருள் பெற்றுச் செல்வார்கள்.

    திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் உள்ள சனி பகவானுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வாகனத்தில் சுவாமியை அமர வைத்து ஸ்தானிகர்கள் வாண்டையார்கள், வாணக்கன்காடு கிராமத்தார்கள் முதல் நாள் 2ம் நாள், 7ம் நாள் திருவிழாக்களில் வாகனத்தில் அமரவைத்த விழாவன்று அலங்கார அபிஷேகமும் வீதியுலாவும் நடைபெறும்.

    கோயில் வழிபாட்டால் ஏற்படும் பயன்கள்

    இத்திருக்கோயில் சுவாமி அம்பாளை பக்தியுடன் வழிபட்டால் பிரமகத்தி நிறை குறை நிவர்த்தியாவதுடன், சகல தோஷங்களும், நோய்களும் நீங்கும். வியாழன் தோறும் விரதம் இருந்து தெட்சிணாமூர்த்திக்குத் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். செவ்வாய்க் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு ராகு கால நேரங்களில் எலுமிச்சை பழத்தோட்டில் தீபமேற்றி 48 நாட்களுக்கு வழிப்பட்டால் திருமணமாகாதவர்களுக்கு சித்தியாகும். மாதவிடாய்க் கோளாறுகள் கர்ப்பப்பைக் கோளாறுகள் உள்ள பெண்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டு தானதர்மம் செய்தால் விரைவில் குணம் பெறுவர் என்பது நம்பிக்கை.

    நீண்ட ஆயுளைப் பெற 3 மாத குழந்தை முதல் 20 வயது வரை ஆணாகயிருந்தால் திருமேனிநாதன் என்றும் பெண்ணாகயிருந்தால் பெரியநாயகி என்றும் உடல்நிலை உயிர்நிலை பாதுகாப்பு இன்றும் நிகழ்கிறது. தெற்குப் பகுதியில் மடப்பள்ளியும் அதற்கு முன்னே அலுவலக அறையும் உள்ளது. திருமணத்தடை குழந்தைப்பேரின்மை உடல் நலம் மற்றும் மனநலம் குன்றியோர் ஆகியோர்க்கு இக்கோயில் சிறப்பிடமாகவும் வினை தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது. இத்திருக்கோயிலின் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    பரிமளேஸ்வரர் கோவில் செல்வதற்கான கூகுள் மேப் வழி



    இக்கோயிலை சுற்றி 25 கிராமங்கள் அமைந்துள்ளன. அனைத்து கிராமங்களிலும் குழந்தைப் பெற்றால் குழந்தைகளுக்கு தங்களை காக்கும் இஷ்ட தெய்வமான திருமணஞ்சேரி கோயிலின் பெருமையை பறைசாற்றும் வகையில் தெய்வங்களை வேண்டிகொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக அன்று முதல் இன்று வரை பரிமளம், பரிமளேஸ்வரர், பரிமளேஸ்வரி, பரிமளநாயகி, திருமணநாதன் என்று பல பெயர்களை பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வது இன்று வரை வழக்கமாக உள்ளது.

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி