Home /pudukkottai /

இந்து கோவில் குடமுழுக்கு விழாவுக்கு சீர்கொண்டு வந்த இஸ்லாமியர்கள்- புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்

இந்து கோவில் குடமுழுக்கு விழாவுக்கு சீர்கொண்டு வந்த இஸ்லாமியர்கள்- புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை முஸ்லீம்கள்

புதுக்கோட்டை முஸ்லீம்கள்

புதுக்கோட்டை கீரமங்கலம் கிராமத்தில் இந்து கோவில் விழாவுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Keeramangalam, India
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு பகுதி கிராமங்களில் இந்து கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வரும் நிகழ்வும் அதே போல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகையின் போது இந்துக்கள் அவர்களின் முறைப்படி சீர் செய்து அவர்களின் விழாக்களின் பங்கேற்பதும் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டவையனார், கொம்புக்கார சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலயங்களில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சீர்வரிசையுடன் இஸ்லாமியர்கள்


இந்த குடமுழுக்கை முன்னிட்டு கீரமங்கலத்தை சுற்றிய பகுதி கிராமங்களில் இருந்து ஒவ்வொரு கிராம வாரியாக பொதுமக்கள் சீர்வரிசையை பாரம்பரிய முறைப்படி கொண்டு வந்தனர்.
இதனிடையே கீரமங்கலம் மேலக்காடு பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள பள்ளிவாசலில் இருந்து பழங்கள், காய்கறிகள், தேங்காய், பூ உள்ளிட்ட 14 வகை தட்டுகளை இந்து முறைப்படி கைகளில் ஏந்தியபடி நாட்டிய குதிரைகளின் நடனத்துடன், விண்ணதிரும் பட்டாசுகள் வெடிக்க, இஸ்லாமிய சிறுவர்கள் ஆட்டம் பாட்டமாக முன்னே செல்ல பின்னே அந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் வரிசையாக அணிவகுத்து கீரமங்கலம் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பட்டவையனார் கோயிலை அடைந்தனர்.

கொண்டாட்டத்தில் சிறுவர்கள்


இதேபோல் காசிம் புதுப்பேட்டையை சேர்ந்த இஸ்லாமியர்களும் நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து சீர் தட்டுகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தாங்கள் கொண்டு வந்த சீரை பாரம்பரிய முறைப்படி விழா தாரரிடம் அளித்தனர்.

கோவில் விழாவில் இஸ்லாமியர்கள்


இந்த காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது. கோயிலுக்குள் வந்த இஸ்லாமியர்களை அங்கிருந்த கோயில் விழாதாரர்கள் ஒன்று கூடி வரவேற்றதோடு வரிசையில் நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கையில் மலர் தட்டுகளோடும் ஆண்கள் மாலை அணிவித்தும் இஸ்லாமியர்களை ஆரத் தழுவி கட்டியணைத்து வரவேற்ற காட்சி மதங்களை கடந்து மனிதநேயத்தை போற்றும் வகையில் அமைந்தது.

சீர்வரிசையுடன் இஸ்லாமியர்கள்


மேலும் தாங்கள் கொண்டு வந்த தட்டு தாம்பூலங்கள் உள்ளிட்ட பொருட்களோடு சேர்த்து ஒரு தாம்பூலத்தில் பணத்தையும் வைத்து நிர்வாகத்தினரிடம் ஜமாத்தார்கள் வழங்கினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, பல்வேறு வட மாநிலங்களில் மதம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தாலும் தங்கள் கிராம பகுதியை பொறுத்தவரையில் பல ஆண்டு காலமாக ஜாதி, மதங்களைக் கடந்து சமத்துவத்தோடு பழகி வருவதாகவும் இந்துக்களின் கோயில் திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்களும் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகளுக்கு இந்துக்களும் சீர் கொண்டு வருவது வழக்கம் என்றும் அந்த அடிப்படையில் இன்று கீரமங்கலம் பட்டவையனார் கோயில் திருவிழாவிற்காக சீர் கொண்டு வந்ததில் மன மகிழ்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதே போல் சீர் கொண்டு வந்தவர்களுக்கு விழாதாரர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும் இது காலங்கள் கடந்தும் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி