Home /pudukkottai /

புதுக்கோட்டையில் சிதிலமடைந்த நிலையிலிருக்கும் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்- மக்கள் ஆசை நிறைவேறுமா?

புதுக்கோட்டையில் சிதிலமடைந்த நிலையிலிருக்கும் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்- மக்கள் ஆசை நிறைவேறுமா?

சிதிலமடைந்த நிலையில் கோவில்

சிதிலமடைந்த நிலையில் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள மங்களாம்பிகை உடனுறை அனந்தேஸ்வரமுடையார் திருக்கோவிலை புணரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karambakkudi, India
    உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவிலை உடனடியாக சீரமைத்து, புதுப்பித்து குடமுழுக்கு நடத்திட பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மங்களாம்பிகை உடனுறை அனந்தேஸ்வரமுடையார் திருக்கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில் 700 ஆண்டுகளுக்கும் முந்தைய கோவில் என  வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் ஈசன், அம்பிகை மட்டுமின்றி துர்க்கை, கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளன.

    சிதிலமடைந்த நிலையில் கோவில்


    நூற்றாண்டுகளை கடந்த இந்தக் கோவிலை பல ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டதால் தற்போது கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவிலை சீரமைத்து புணரமைக்கும் பணிகளில் பக்தர்கள் பலரும் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கினர்.

    கூடாரத்தில் சிலைகள்


    ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அப்பணியினை செய்து முடிக்க முடியாமல் போனது. பல நூறு ஆண்டுகள் தொன்மையான இந்த ஆலயத்திற்கு உள்ளே நுழைய முடியாத நிலை உள்ளதால், பக்தர்கள் வசதிக்காக தற்போது சிலைகளை வளாகத்தின் உள்ளே சிறிய கூரை கொட்டகை ஒன்று அமைத்து அதன் உள்ளே வைத்து வழிபட்டு வருகின்றனர்.

    பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் இங்கு வந்து வழிபட பெண்கள் உட்பட பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கோவில் இல்லா ஊரில் வாழ வேண்டாம் என்பது முன்னோரின் முதுமொழி ஆகும். ஆனால், ஊரில் இருக்கும் கோவிலை வழிபட முடியாமல் கறம்பக்குடி பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலை உடனடியாக புணரமைத்து குடமுழுக்கு செய்து பக்தர்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலமாக பக்தர்களால் புகழப்படும் இத்திருத்தலம் கறம்பக்குடி நகரின் தென் பகுதியில் பெரிய கருப்பர் கோவில் அருகே அமைந்துள்ளது.

    இக்கோவிலிற்கு புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணித்து சென்றடையலாம்.
    புதுக்கோட்டையில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தொன்மையான திருத்தலம்.

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி