புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னையா.இவர் தனது மனைவியுடன் சேர்ந்து நெல் வயலில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னையா தனது 12 ஏக்கர் நிலத்தில் 2007 ஆம் ஆண்டு ”நீர்வளம் நிலவளம்” திட்டத்தின் மூலம் பண்ணை குட்டை ஒன்றை அமைத்துள்ளார். அதில் எட்டு ஏக்கர் அளவுக்கு மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நெல் வயலில் எப்படி மீன்களை வளர்க்க முடியும் என்ற ஆவலில் அதை பற்றி தெரிந்து கொள்ள அவரது நிலத்திற்கு ஒரு விசிட் அடித்தோம். விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பொன்னையா நம்மை மரத்தடியில் உட்கார சொல்லி, தனது விவசாய பணிகளை விரைந்து முடித்து விட்டு வந்தார்.
நம்மிடம் உள்ள அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க பொறுமையாக ஒவ்வொன்றாக பதிலளிக்க தொடங்கினார் பொன்னையா. மற்றவர்கள் மீன் வளர்ப்பிற்கு நாங்க மீன் வளர்ப்பிற்கு பெரிய வித்தியாசம் உள்ளது. நம்ம தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மூன்று அடியிலிருந்து 4 அடி வரை தண்ணீர் இருந்தால் தான் மீன் வளர்க்க முடியும் என்று சொல்றாங்க. ஆனா நாங்க வளக்குற மீனுக்கு ஒரு அடியிலிருந்து ரெண்டு அடி வரையில் இருந்தாலே போதும், அதிலே மீன் வளர்க்கலாம். என் நிலம் 12 ஏக்கர்ல நாலு ஏக்கருக்கு 12 மாசமும் மீன் இருக்க மாதிரி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டோம். மீதி 8 ஏக்கர்ல நெல்லும் மீனும் மாறி மாறி என செய்து வருகிறோம்.
நெல்லை முதலில் நட்டு விட்டு அதன் பின் மீனை வளர்க்கிறோம். முதலில் உழவு முடிந்த பின் அரை அடிக்கு தண்ணீர் நிறுத்த வேண்டும். அதன் பின் ஏரி, கம்மாய்களில் கிடைக்கும் பாசி இனங்கள் பத்து கிலோ அளவிற்கு எடுத்துட்டு வந்து வயலில் போட வேண்டும் அதன்பின் 50 கிராம் லிருந்து 100 கிராம் மீனை இந்த 1 அடி தண்ணீரில் எடுத்துட்டு வந்து விட வேண்டும். அதன் பின் பாசியை சாப்பிட்டுவிட்டு மீன் நன்கு வளர்ந்து விடும் ஒரு கிலோ அளவிற்கு மீன் வளர்ந்தவுடன் மீனை அறுவடை செய்து விட்டு அதே வயலில் தண்ணீரை மட்டும் வெளியேற்றிவிட்டு மீண்டும் தங்களது நெல் பயிர் காண நடவு பணியை தொடங்கி விடுவோம்.
இதையும் படிங்க: அழகிய கிராமங்களை தேடி தொடரும் பயணம்.. இந்த வாரம் இடையப்பட்டி!
இந்த இரண்டு விவசாயத்திற்கு எந்த விதமான உரமோ, ரசாயனமோ அல்லது செலவோ செய்ய தேவை இல்லை. ஏனெனில் இந்த பாசிகள் அனைத்தும் ப்ரோட்டீன் அதை மீன்கள் உண்டு விட்டு அமோனியாவாக வெளியேற்றுகிறது அந்த அம்மோனியா நைட்ரஜன் ஆக மாறி நெற்பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் எந்த செலவும் இன்றி மீன் வளர்ப்பு மற்றும் நெற் பயிர் விவசாயம் எளிமையாக செய்ய முடிகிறது.
இயற்கையாகவே நெல் நன்கு செழித்து வளர்கிறது. செயற்கை தீவனம் ஏதும் தேவையில்லை. ஒரு ஏக்கருக்கு ஒரு டன் அளவுக்கு மீன்கள் உற்பத்தி ஆகின்றன.ஒரு வருடத்திற்கு ஏழு முதல் எட்டு லட்சத்திற்கு சம்பாதிக்கிறோம். விவசாயிகள் விவசாயத்தில் லாபம் இல்லை என்று துவண்டு போகாமல் இதுபோன்ற முறைகளை மாற்றி யோசித்து வேறு எந்த விதத்தில் செயல்பட்டால் லாபம் பார்க்கலாம் என்று யோசித்து செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து” என்றார் விவசாயி பொன்னையா.
மேலும் நெல்லில் விவசாயத்தில் வந்துள்ள புதிய டெக்னாலஜியை ஐஎம்டி மூலம் கற்றுக் கொண்டோம். அதன் மூலம் தண்ணீரை எப்படி நெல் வயல்களுக்கு முறையாக செலுத்த வேண்டும் என்று அந்த திட்டம் எங்களுக்கு விரிவாக விவரிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம் ஆனால் இந்த முறையை பயன்படுத்தி விவசாயம் செய்தால் லாபம் நிச்சயம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் பொன்னையா. மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம் என புலப்பட்டது. அவரிடம் இருந்து விடைபெற்று பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆயத்தமானோம்.
செய்தியாளர் : சினேகா விஜயன் (புதுக்கோட்டை )
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fish, Local News, Pudukkottai, Tamil News